பெட்டாலிங் ஜெயா: மங்கோலிய மாடல் அழகி அல்டன்டுயா ஷாரிபு கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் போலிஸ் அதிகாரி அஸிலா ஹாத்ரி (படம்) 2015 ஏப்ரல் 15க்குப் பிறகு சிறைச்சாலையை விட்டு வெளியே வரவில்லை என்று மலேசிய சிறைத்துறை தெரிவித்துள்ளது.
வழக்கு விசாரணைக்காக சிப்பாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு 2015 ஏப்ரல் 15ஆம் தேதி அழைத்துச் செல்லப்பட்ட பின்னர் அவர் வெளியில் விடப்படவில்லை என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் சிறைத்துறை கூறியுள்ளது. இவ்வாண்டு பிப்ரவரியில் மிகவும் முக்கியமான நபர் ஒருவருடனான சந்திப்புக்காக சிறையிலிருந்து அஸிலா வெளியே கொண்டு வரப்பட்டதாக முன்னாள் பிரதமர் நஜிப்பின் வழக்கறிஞர் நேற்று முன்தினம் கூறியதற்குப் பதில் சொல்லும் விதமாக சிறைத் துறை இந்த விளக்கத்தை அளித்துள்ளது.
காஜாங் சிறைச்சாலையில் உள்ள அஸிலாவை அவரது குடும்ப உறுப்பினர்கள் கடந்த ஆண்டு 34 முறை சந்தித்துள்ளனர். அவரது வழக்கறிஞர் அவரை 15 முறை சந்தித்துள்ளார். இருப்பினும் முக்கியமான மனிதரைச் சந்திக்க அஸிலா இவ்வாண்டு வெளியில் விடப்பட்டதாகக் கூறப்படும் தகவலில் உண்மை இல்லை,” என்று சிறைத் துறை கூறியுள்ளது.