பெட்டாலிங் ஜெயா: போலிச் செய்தியை குற்றமாக பார்க்கும் சட்டத்தை மலேசியா ரத்து செய்துள்ளது.
பிரதமர் அலுவலகத்தின் துணை அமைச்சர் முகமட் ஹனிபா மைதின், “கடுமையான சட்டங்களை ஒழிப்பதற்கும், நிர்வாகத்தை சரிபார்த்து சமநிலைப்படுத்துவதற்கும் ஊடகங்களுக்கு சுதந்திரம் இருப்பதை உறுதி செய்வதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டிற்கு ஏற்ப இச்சட்டம் ரத்து செய்யப்பட்டது,” என்றார்.
“இந்த கொடுங்கோன்மை நாம் மீண்டும் செய்ய விரும்பாத ஒன்று. கடுமையான சட்டங்கள் மூலம் மனிதர்களை அடிமைப்படுத்த முடியாது, ஏனென்றால் சுதந்திரம் மிகவும் விலைமதிப்பானது,” என்றும் அவர் கூறினார்.
பெர்னாமா செய்தி நிறுவனத்திடம் பேசிய ஹனிபா, தற்போதுள்ள சட்டங்கள் போதுமானவை என்றும் அவை போலிச் செய்திகளைக் கையாள போதுமானதாக இல்லாவிட்டால் திருத்தம் செய்ய முடியும் என்றும் சொன்னார்.
கடந்த ஆண்டு மே மாதம் 14வது பொதுத் தேர்தலுக்கு முன்னர் பிஎன் அறிமுகப்படுத்திய சர்ச்சைக்குரிய சட்டத்தை ஒழிப்பதற்கான பக்காத்தான் ஹரப்பானின் இரண்டாவது முயற்சி இதுவாகும்.