கோலாலம்பூர்: இஸ்லாமிய நாடுகளுக்கான உச்சநிலை மாநாடு நேற்று முடிவுக்கு வந்தது. நான்கு நாட்களுக்கு நீடித்த இம்மாநாடு குறித்து எழுந்த சர்ச்சைகள் தொடர்பில் அதன் நோக்கம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது என்று கூறியிருந்தார் மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது.
நேற்று மாநாட்டை முடித்து வைத்துப் பேசிய திரு மகாதீர், முஸ்லிம்களுக்காக இயங்கி வரும் மற்ற தளங்களுக்குப் பதிலாக இம்மாநாடு ஏற்பாடு செய்யப்படவில்லை என்றும் மற்ற முஸ்லிம் நாடுகளை வகைப்படுத்தவோ பல்வேறு பிரிவினைகளை உருவாக்கவோ நடத்தப்படவில்லை என்றும் தெளிவு படுத்தினார்.
“நம் பலங்களையும் பலவீனங் களையும் மதிப்பிடுவதுடன் நம்மிடம் உள்ள சொத்துகளையும் மதிப்பீடு செய்வது இந்த மாநாட்டின் நோக்கம். ஒரு நாட்டின் பலத்தைப் பயன்படுத்தி இன்னொரு நாட்டின் பலவீனத்தை எவ்வாறு எதிர்கொள்ளலாம் என ஆலோசிப்பதே மாநாட்டில் கலந்துகொள்ளும் நாடுகளின் விருப்பமாகும்,” என்றார் டாக்டர் மகாதீர்.
ஆனால் சிலர் இந்த நோக்கங் களைத் தவறாகப் புரிந்துகொண்டதாக சொன்னார் பிரதமர்.
“மாநாடு தொடர்பில் எழுந்துள்ள எதிர்மறையான கருத்துகள் தவறானவை, நியாயமற்றவை, என்றார் அவர். குறைகூறிய நாடுகள் எவை என்று திரு மகாதீர் குறிப்பிடாவிட்டாலும் அவற்றில் சவூதி அரேபியாவும் அடங்கும் என்று கூறப் படுகிறது.
இதற்கிடையே ஈரான், கத்தார் ஆகிய இரு நாடுகளையும் திரு மகாதீர் பாராட்டினார். பொருளாதாரத் தடைகளுக்கும் தடை ஆணைகளுக்கும் உட்படுத்தப்பட்ட நிலையிலும் இவ்விரு நாடுகள் தன்னிச்சையாக, சொந்தக் காலில் நின்று இயங்குவதை அவர் சுட்டினார்.
இதற்கிடையே சமயம் சார்ந்த உணர்வுகளைத் தட்டி எழுப்பும் வகையில் நடந்துகொள்வதைத் தவிர்த்துவிடுமாறு டாக்டர் மகாதீர் ஸாக்கிர் நாயக்கிடம் கூறியிருந்ததாக தெரிவித்தார்.
சர்ச்சைக்குரிய இஸ்லாமிய சமய போதகரான டாக்டர் ஸாக்கிர் நாயக் மாநாட்டில் கலந்துகொண்ட நிலையில் அவரிடம் இவ்வாறு கூறியதாக திரு மகாதீர் பகிர்ந்துகொண்டார்.
“மலேசியாவில் உள்ள இனங்கள் குறித்து எந்தக் கருத்தையும் கூற வேண்டாம் என்று நாங்கள் அனைவரிடமும் கேட்டுக்கொண்டுள்ளோம். இது உணர்வுகள் தொடர்பான ஒரு விவகாரம். இதனால் நாட்டு மக்களுக்குச் சினமூட்டி விரோத உணர்வை ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை,” என்றார் திரு மகாதீர்.