கோலாலம்பூர்: மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் 300,000க்கும் மேற்பட்ட வீடுகளுக்கான தண்ணீர் விநியோகம் நேற்று தடை செய்யப்பட்டது.
செமென்யே ஆற்றில் துர்நாற்றம் வீசியதன் தொடர்பில் தூய்மைக்கேடு பிரச்சினை இருந்ததைக் கண்டறிந்ததை அடுத்து தண்ணீர் விநியோகம் தடைப்பட்டது.
சுங்கை செமென்யே தண்ணீர் சுத்திகரிப்பு ஆலை நேற்று காலை மூடப்பட்டதைத் தொடர்ந்து பெட்டாலிங், செப்பாங், கோலாலங்காட் முதலிய வட்டாரங்களில் உள்ள 328,957 வீடுகளுக்கான தண்ணீர் விநியோகம் தடைப்பட்டதாக மலேசிய செய்தி நிறுவனமான ‘பெர்னாமா’ தெரிவித்தது.
ஆற்றில் துர்நாற்றம் வீசுவதற்கான காரணத்தை அடையாளம் காண்பதுடன் அதற்குப் பொறுப்பான நபர்களையும் கண்டுபிடிக்க ஒரு கண்காணிப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அவசரகால நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.
சுத்திகரிப்பு ஆலை மீண்டும் எப்போது இயங்கத் தொடங்கும் என்றும் தண்ணீர் விநியோகத் தடை எப்போது நீக்கப்படும் என்பது குறித்தும் தகவல் தெரிவிக்கப்படவில்லை.
இவ்வாண்டில் நான்காவது முறையாக சுத்திகரிப்பு ஆலை மூடப்பட்டு தண்ணீர் விநியோகிப்பதில் தடை ஏற்பட்டுள்ளது.