கோலாலம்பூர்: மலேசியாவின் அரசு முதலீட்டு நிறுவனமான 1எம்டிபி நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ள இழப்பு குறித்த வழக்கில் அமெரிக்க நிறுவனமான கோல்டுமன் சாக்ஸ் மீது 27.2 பில்லியன் ரிங்கிட் கோரி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு ஜனவரி மாதம் 14ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக மலேசிய உயர் நீதிமன்றத்தில் முன்னிலையான அரசு துணை வழக்கறிஞர் ஸாக்கி அஸ்ரியஃப் சுபிர் அரசு தரப்பு சிங்கப்பூரிலுள்ள கோல்டுமன் சாக்ஸ் மீதான அழைப்பாணையைக் கொண்டு சேர்க்கும் முயற்சியில் தற்பொழுது ஈடுபட்டுள்ளதாக நீதிபதி முகமது சைனி மஸ்லானிடம் விளக்கினார்.
இதையடுத்து நீதிபதி சைனி மஸ்லான், வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்ததாக ஸ்டார் செய்தித்தாள் தெரிவிக்கிறது.
இந்த வழக்கு நேற்று நீதிமன்றத்திற்கு வந்தபோது கோல்டுமன் சாக்ஸ் தரப்பில் கிருஷ்ணா தலுமா, பிரேம் ராமச்சந்திரன் ஆகிய இரு வழக்கறிஞர்கள் முன்னிலையாகினர்.
முன்னதாக, நேற்று இந்த வழக்கை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திலிருந்து உயர் நீதிமன்றத்திற்கு மாற்றும் அரசாங்கத் தரப்பு மனு மீதான விசாரணை நடைபெற்றது.
இந்த வழக்கில் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் 1எம்டிபி விவகாரத்தில் ேகால்டுமன் சாக்ஸ் நிறுவனம் 1எம்டிபியின் கிளை நிறுவனமான ஆபார் இன்வஸ்ட்மண்ட் பிஜேஎஸ் லிமிடெட் கோல்டுமன் சாக்ஸ் நிறுவனத்துக்கு விற்ற முறிகள் தொடர்பாக முக்கிய விவரங்களைத் தரவில்லை எனக்கூறி கோல்டுமன் சாக்ஸ் மீது நான்கு குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தது இங்கு நினைவுகூரத்தக்கது.
இதன் தொடர்பில் முன்னாள் கோல்டுமன் சாக்ஸ் வங்கியாளரான ரோஜர் இங் சோங் ஹுவா இந்த முறிகள் விற்பனை தொடர்பான வழக்கில், முக்கிய விவரங்களை மறைத்தது, அதன் தொடர்பில் பொய்யான தகவல்களைத் தந்தது, போன்ற தம்மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வழக்கு விசாரணை கோரியிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
1எம்டிபி விவகாரத்தில் அெமரிக்க டாலர் 4.5 பில்லியன் பெறுமானமுள்ள பணம் 2009ஆம் ஆண்டுக்கும் 2014ஆம் ஆண்டுக்கும் இடையே தவறாகக் கையாடப்பட்டுள்ளதாக அமெரிக்க நீதித் துறை தெரிவித்துள்ளது.