மலேசியாவில் தாய்மொழிப் பள்ளிகளில் ஜாவி எழுத்து அடுத்த ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்படும் என்ற அறிவிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து சீனக் கல்விக் குழுவான டொங் சொங், மற்ற சீன அரசு சார்பற்ற நிறுவனங்களுடன் காஜாங்கில் நேற்று முன்தினம் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டிற்கு நீதிமன்றம் தடை விதித்தது.
பாதுகாப்புக் காரணங்களுக்காகவே இந்தப் பேரணியை நடத்த அனுமதிக்கக்கூடாது என்ற கோரிக்கையுடன் நீதிமன்றத்தை போலிஸ் நாடியது என்றும் வேறு எந்தக் காரணமும் இல்லை என்றும் போலிஸ் தலைமை ஆய்வாளர் அப்துல் ஹமீத் படோர் தெரிவித்தார்.
ஆனால், போலிசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன.
அந்த வகையில், மாநாடு நடத்த அனுமதிக்கக்கூடாது என்று நீதிமன்றத்திற்குச் சென்ற போலிஸ், அதேபோல மாநாடு நடந்தால் கலவரத்தில் ஈடுபடப்போவதாக மிரட்டியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனநாயக செயல் கட்சியின் (டிஏபி) மூத்த தலைவர் லிம் கிட் சியாங் வலியுறுத்தி இருக்கிறார்.
இதனிடையே, ஜாவி எழுத்து அறிமுகத்திற்கு எதிராக ‘சேகாட்’ அமைப்பு பெட்டாலிங் ஜெயாவில் இன்று கூட்டம் ஒன்றை நடத்த இருக்கிறது.
இந்தக் கூட்டம் குறித்து போலிசுக்கு ஏற்கெனவே தகவல் தெரிவித்துவிட்டதாகவும் இந்தக் கூட்டத்தில் கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் கலந்துகொள்வார் என நம்புவதாகவும் ‘சேகாட்’ செயலாளர் அருண் துரைசாமி கூறினார்.