ஜோகூர் பாரு: வரும் ஜனவரி 1ஆம் தேதி தொடங்கி ஓராண்டு காலத்திற்கு மலேசியாவுக்கு வரும் சீன, இந்திய சுற்றுப்பயணிகளுக்கு அதிகபட்சம் 15 நாட்களுக்கு விசா பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக மலேசிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதனையடுத்து, நாட்டிற்கு வரும் சீன, இந்திய சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் சுற்றுப்பயணத்துறை வளர்ச்சிக்கு குறிப்பிடும்படியாக பங்களிப்பவர்களில் சீன, இந்திய சுற்றுப்பயணிகளும் அடங்குவர் என சுற்றுப்பயணத்துறை, கலை, கலாசார அமைச்சின் தலைமைச் செயலாளர் நூர் ஸாரி ஹமாட் தெரிவித்துள்ளார்.
அண்டை நாடுகளான சிங்கப்பூர், இந்தோனீசியா ஆகியவற்றை சேர்ந்த பயணிகளே மலேசியாவுக்கு ஆக அதிக எண்ணிக்கையில் வருவதாக அவர் கூறினார்.
“இந்நிலையில், ஓராண்டுகாலத்திற்கு விசாவை தள்ளி வைப்பதாக அரசாங்கம் அறிவித்ததையடுத்து, சீன, இந்திய சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என நம்புகிறோம்,” என்று டாக்டர் நூர் ஸாரி சொன்னார்.
மலேசியாவிற்கு அடுத்த ஆண்டு 30 மில்லியன் சுற்றுப்பயணிகள் வருவர் என அந்நாடு எதிர்பார்க்கிறது.
கடந்த ஆண்டு 25.8 மில்லியன் சுற்றுப்பயணிகளை அந்நாடு ஈர்த்தது. இவ்வாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் சுற்றுப்பயணிகளின் வருகை 20.1 மில்லியனாக பதிவாகியிருந்தது.
சுற்றுப்பயணிகள் செலவிட்ட ஒட்டுமொத்த தொகை 66.14 பில்லியன் ரிங்கிட்டாக பதிவானது.