கிமானிஸ்: மலேசிய அரசியலில் கிமானிஸ் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தல் மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது. வரும் 18ஆம் தேதி நடைபெற இருக்கும் இடைத்தேர்தல் வேட்பாளராக முன்னாள் சாபா சட்டமன்ற உறுப்பினர் முகம்மது அலாமின், 47, என்பவரை எதிர்த்தரப்பு அம்னோ அறிவித்தது.
சாபா மாநிலத்தின் கிமானிஸ் தொகுதி ஏற்கெனவே அம்னோ வசம் இருந்தது. ஆயினும் 2018 மே பொதுத் தேர்தலில் வெறும் 156 வாக்குகளில் அம்னோ வேட்பாளர் அனிஃபா அமான் வென்றிருந்தார்.
அண்மையில் அவரது வெற்றி செல்லாது என உச்ச நீதிமன்றம் அறிவித்ததைத் தொடர்ந்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இவ்வாண்டின் முதல் இடைத்தேர்தல் என்பதாலும் எதிரணி பலம் அதிகரித்து வருவதாலும் இத்தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி ஆட்சிக்கு வந்த பின்னர் நடக்கும் 10வது நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் இது.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஒன்பது இடைத்தேர்தல்களில் பக்கத்தான் ஹரப்பான் ஐந்திலும் அம்னோ தலைமையிலான தேசிய முன்னணி நான்கிலும் வென்றன.
பலமிழந்து தவிக்கும் சாபா மாநில அம்னோவுக்கு இத்தேர்தல் வெற்றி மிகவும் முக்கியம். 2018 டிசம்பரில் அம்மாநிலத்தின் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஒன்பது சட்டமன்ற உறுப்பினர்களையும் அம்னோ இழந்தது.
அவர்களில் பெரும்பாலானோர் பிரதமர் மகாதீர் முகம்மதுவின் பெர்சாத்து கட்சிக்குத் தாவினர்.