பெட்டாலிங் ஜெயா: தேர்தலின்போது மக்களிடம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கும் பிரதமர் பொறுப்பை அன்வாரிடம் ஒப்படைக்கும் தேதியைக் குறிப்பதற்கும் இதுவே தக்க தருணம் என்று பெர்சே வலியுறுத்தியுள்ளது.
அந்த வாக்குறுதிகளில் பிரதமருக்குள்ள அதிகாரத்தைக் குறைத்தல், அரசாங்கத்தின் முக்கிய அமைப்புகளான மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தை மறுசீரமைத்தல், தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்தை அரசாங்கத் தலையீடு இன்றி தனிமைப்படுத்துதல், தேர்தல் முறையில் சீர்திருத்தம் கொண்டு வருதல் போன்றவை அடங்கும்.
பக்கத்தான் கூட்டணி பதவியேற்று 19 மாதங்கள் முடிவடைந்து விட்டன.
எனினும் தேர்தலின்போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் சிறு பகுதியைத்தான் அக்கூட்டணி நிறைவேற்றி உள்ளது.
அத்துடன் அடுத்த பிரதமரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்படும் தேதி இதுவரையிலும் குறிக்கப்படவில்லை என்று தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் அமைப்பான பெர்சே கூறியுள்ளது.
பக்கத்தான் கூட்டணி பதவியேற்றதும் மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை மறந்துவிட்டது. மாறாக இங்கு மோசமான அரசியல் நிலவரத்தையே காணமுடிகிறது.
எதிர்க்கட்சிகளுடன் மறைமுக நட்புகொண்டு சதி வேலையில் ஈடுபடுவதன் மூலம் உட்கட்சி பூசலை உருவாக்குவது, இனப்பாகுபாடு, சமய ரீதியாக மக்களிடம் பசப்புரையாற்றுவது போன்றவை நாட்டின் நிலைத்தன்மையைச் சீர்குலைத்துவிடும்.
வாழ்க்கைத்தரத்தில் நல்ல மாற்றம் ஏற்படும் என எதிர்பார்த்து வாக்களித்து இந்த அரசை ஆட்சியமைக்க மக்கள் வழி ஏற்படுத்திக்கொடுத்தனர்.
அவர்களின் நம்பிக்கையை உருக்குலையச் செய்யும் வகையில் 19 தேர்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலானவை கிடப்பில் போடப்பட்டுள்ளன என்று அந்த அமைப்பு ஓர் அறிக்கையில் சாடியுள்ளது.
அதிகாரப் போட்டி, சதி முயற்சி, வதந்தி மற்றும் பொய்ச்செய்திகளைப் பரப்புதல் ஆகியவற்றால் நாட்டின் நிலைத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது.
அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளது என்று பெர்சே தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதேபோல் அரசாங்க ஊழியர்கள், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆகியோர் நாட்டில் அரசு மேற்கொள்ளவிருக்கும் சீர்திருத்தங்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
அரசின் நடவடிக்கைகளைப் பொறுத்தே அவர்களின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் அரசு பெற முடியும் என்று பெர்சே கூறியுள்ளது.
எனவே இதைக் கவனத்தில் கொண்டு பக்கத்தான் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது.
பிரதமர் பொறுப்பு ஒப்படைக்கும் தேதியைக் குறிக்கவும் இதுவே தக்க தருணம் என்று மேலும் பெர்சே தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.