பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் வெளிநாட்டினரைக் கண்டுபிடித்து வெளியேற்றுவதற்காக ‘ஆபரேஷன் பிக் ஸ்வீப்’ என்ற அதிரடி நடவடிக்கை இடம்பெற்று வருகிறது.
அதன் விளைவாக, இதுவரை 474 கள்ளக் குடியேறிகளும் அவர்களுக்குப் புகலிடம் அளித்ததாக முதலாளிகள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் கைருல் ஸைமீ தெரிவித்துள்ளார்.
இம்மாதம் ஒன்றாம் தேதியில் இருந்து இதுவரை 124 அமலாக்க நடவடிக்கைகள் மூலம் 1,871 வெளிநாட்டினர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக அவர் கூறினார்.
“ஆக அதிகமாக இந்தோனீசியர்கள் 220 பேர் பிடிபட்டனர். அடுத்த நிலைகளில் சீனா (89), பங்ளாதேஷ் (78), மியன்மார் (42), பிலிப்பீன்ஸ் (22) உள்ளிட்ட மற்ற நாடுகளைச் சேர்ந்தோரும் கைதாகினர்.
“அவர்களைச் சட்ட விரோதமாக வேலையில் அமர்த்தியிருந்த முதலாளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார் அவர்.
முன்னதாக, கடந்த மாதம் 31ஆம் தேதிக்குள் மலேசியாவில் உள்ள கள்ளக் குடியேறிகள் தங்களது இருப்பைப் பதிவு செய்தால் எந்தத் தண்டனையுமின்றி அவர்களது சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்படுவர் என அறிவிக்கப்பட்டது.
அந்த ‘பேக் ஃபார் குட்’ திட்டத்தின்கீழ், 190,471 கள்ளக் குடியேறிகள் தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளனர் என்றும் வாய்ப்பளிக்கப்பட்டும் அதைச் செய்யத் தவறியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திரு கைருல் சொன்னார்.
இவ்வாண்டில் மட்டும் குறைந்தது 70,000 கள்ளக் குடியேறிகளைக் கைது செய்ய உள்துறை அமைச்சு இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கள்ளக் குடியேறிகள் பற்றி தெரியவந்தால் உடனடியாக அவர்களைப் பற்றி குடிநுழைவுத் துறைக்குத் தகவல் தெரிவிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.