கோலாலம்பூர்: பதவியிலிருந்து விலகும்படி கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக்கிற்கு மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது கடிதம் எழுதியதால் திரு மஸ்லீ பதவி விலகியதாக மலேசியன் இன்சைட் இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது.
மஸ்லீ, அமைச்சரவை முடிவுக்கேற்ப நடந்துகொள்ளத் தவறியதால் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக அந்த இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 27ஆம் தேதி திரு மஸ்லீக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் அவரை பதவி விலகும்படி பிரதமர் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்பட்டது.
ஜாவி எழுத்து போதனை, பள்ளிகளில் இலவச இணைய சேவை, தொடக்கநிலை பள்ளிகளுக்கான இலவச சிற்றுண்டி திட்டம் போன்ற விவகாரங்களில் அமைச்சரவை உத்தரவுகளை மஸ்லீ பின்பற்றவில்லை என்று அக்கடிதத்தில் பிரதமர் குறிப்பிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும் இத்தகவலை உறுதிப்படுத்திக்கொள்ள திரு மஸ்லீயுடன் தொடர்புகொள்ள முயன்றதாகவும் ஆனால் அவரிடமிருந்து எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை என்றும் மலேசிய கினி இணையத்தள பதிவேடு கூறுகிறது.
மஸ்லீ கடந்த ஞாயிற்றுக்கிழமை கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.