கோலாலம்பூர்: மலேசியாவில் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பியோடிய ஜோ லோ என்ற வர்த்தகர் தான் ஒரு இடைத்தரகர் மட்டுமே என்றும் 1எம்டிபி மோசடி விவகாரத்தில் தம்மைவிட மிகப் பெரிய பங்கு வகித்தவர்கள் தம் மீது பழி சுமத்துகின்றனர் என்றும் கூறியுள்ளார்.
உலகளாவிய 1எம்டிபி நிதி மோசடியில் தமது பங்கு பற்றி நீண்டகாலமாக மௌனமாக இருந்து வந்த ஜோ லோ, "உலக நிதி அமைப்புகள், அதன் ஆலோசகர்கள் ஆகியோர் மீது செலுத்தப்படும் கவனத்தைவிட என்மீது செலுத்தப்படும் மிக அதிகப்படியான கவனம் உண்மையிலேயே என்னை வியக்க வைத்துள்ளது," என்று கூறியுள்ளளார்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளுக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டியில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ஒரு வர்த்தக விவகாரம் தொடர்பில் நடவடிக்கை எதுவும் மேற்கொள்வது என்பது, அந்த நிறுவன பங்குதாரர்கள், அந்த நிறுவனத்தின் நிர்வாக சபை, அனைத்துலக வங்கி அதிகாரிகள், வழக்கறிஞர்கள் இவர்களுடன் சுயேச்சை நிபுணர்களும் உலக நிதி ஆலோசகர்களும் கூடி ஆலோசித்து முடிவெடுக்கும் விவகாரம் என்று திரு ஜோ லோ, 38, விளக்கினார்.
"இதில் உண்மை என்னவென்றால், நான் ஒரு அரசியல்வாதி இல்லை என்பதால் என்மீது பழிபோடுவது மிகவும் எளிதான ஒன்று," என்று அவர் மின்னஞ்சல் வழியாக வழங்கிய தமது பேட்டியில் தெரிவித்தார்.
உலகின் செல்வாக்குள்ள தொழிலதிபர்களுடன் நிதி விவகாரங்களில் முக்கியமான முடிவெடுப்பவர்களுடனும் தமக்கு நல்ல உறவுகள் இருப்பதை வைத்துக்கொண்டு பலர் தம்மை நாடி வருவதாக தெரிவித்தார் திரு ஜோ லோ.
இதில் தம்மை நாடி வருபவர்களை இவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கும் இடைத்தரகராக மட்டுமே தாம் செயல்படுவதாக கூறியுள்ளார்.
அவருடைய இந்தக் கருத்து மலேசியாவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிடும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்துரைக்கின்றனர்.
மலேசியாவில் நடைபெற்றுவரும் 1எம்டிபி வழக்கு விசாரணையில் முன்னாள் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்குடன் ஜோ லோ சதியில் ஈடுபட்டு அரசு நிதி நிறுவனமான 1எம்டிபியிலிருந்து பணத்தைக் கையாடியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதில் நஜிப் ரசாக், ஜோ லோ உட்பட பலரால் தாம் ஏமாற்றப்பட்டதாக தமது தற்காப்பு வாதத்தில் கூறிவருகிறார்.
ஐரோப்பா கண்டத்தில் உள்ள ஒரு நாட்டில் அரசியல் அடைக்கலம் பெற்றுள்ளதாக நம்பப்படும் ஜோ லோ, தம்மீதான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை, தொடர் மனித உரிமை மீறல்கள் காரணமாக தமக்கு அரசியல் அடைக்கலம் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் இவரை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தும் முயற்சி தொடர்கதையாகி நீண்டுவரும் நிலையில், ஜோ லோ தற்பொழுது இருப்பதாக நம்பப்படும் நாட்டிடமிருந்து மலேசியாவிற்கு எவ்வித ஒத்துழைப்பும் கிடைக்கவில்லை என்று மலேசிய தலைமை போலிஸ் தளபதி இன்ஸ்பெக்டர் ெஜனரல் ஹமிது பாடோ கூறியது இங்கு நினைவுகூரத்தக்கது.