மலேசியாவில் சாலைக் கட்டணம் குறையலாம்

கோலாலம்பூர்: மலேசியாவின் பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் அந்நாட்டின் பெருவிரைவுச் சாலைகளுக்கான கட்டணத்தைக் குறைப்பது குறித்து மறுபரிசீலனை செய்து வருகிறது. 

அதற்கான வழிகளை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. 

குறிப்பாக 772 கி.மீ. தூரத்தைக் கொண்ட வடக்கு-தெற்கு பெருவிரைவுச்சாலை உள்ளிட்ட ஐந்து பெருவிரைவுச் சாலைகளுக்கான சுங்கக் கட்டணத்திற்கான சலுகை காலத்தை நீட்டிப்பதன் வாயிலாக கட்டணத்தைக் குறைப்பதற்கு மலேசிய அரசு திட்டமிடுகிறது.

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் பெருவிரைவுச் சாலை பராமரிப்பு மற்றும் சுங்க வரி வசூல், சில மாதங்களுக்கு முன் தனியார்மயப்படுத்த பரிந்துரைக்கப்பட்டது.

இந்நிலையில் பெருவிரைவுச்சாலைப் பராமரிப்பை அரசாங்கமே தன் வசம் வைத்துக்கொண்டு, சலுகைக் காலத்தைக் கூட்டுவதன் மூலம் சாலைக்கட்டணத்தைக் குறைக்க அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. 

சாலைக்கட்டணங்கள் முற்றிலும் ஒழிக்கப்படும் என்று பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி தேர்தலின்போது வாக்குறுதி அளித்திருந்தது. 

கடந்த ஆண்டு அக்டோபரில் நிதியமையச்சர் லிம் குவான் எங், வெளியிடப்பட்ட வரவு செலவுத் திட்ட அறிக்கையில் 18% சாலை சுங்க வரி குறைக்கப்படும் என்று   அறிவிக்கப்பட்டிருந்தது.