மலேசிய தொடக்கப்பள்ளிகளில் இலவச காலை உணவுத் திட்டம்

மலேசியா முழுவதும் உள்ள 100 தொடக்கப்பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் இன்று (ஜனவரி 20) தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தின்மூலம் நாடு முழுவதும் 4,000 மாணவர்கள் பலனடைவனர். இந்தத் திட்டத்தின் முதல் கட்டத்திற்காக 22 மில்லியன் ரிங்கிட் (S$7.3 மில்லியன்) ஒதுக்கப்பட்டுள்ளது.

உடற்குறைபாடு உள்ள மாணவர்கள், வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள், ஓராங் அஸ்லி பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஆகிய பல்வேறு தரப்பினரை இலக்காகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, இடைநிலை மாத குடும்ப வருமானமாக 3,000 ரிங்கிட்டிற்கும் குறைவாக ஈட்டும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் இதில் பலனடைகின்றனர்.

1979ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டம், இப்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளது. தற்போதைய தரவுகளின்படி இதுவரை சுமார் 517,000 மாணவர்கள் இதன்மூலம் பலனடைந்துள்ளனர்.

“வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள்மீது கவனம் செலுத்துகிறோம். ஒவ்வொரு நாளும் வகுப்புகள் தொடங்கப்படுவதற்கு முன்பு மாணவர்கள் பசியில் வாடாமல் இருப்பதை நாங்கள் உறுதிசெய்ய விரும்புகிறோம்,” என்று தி சன் நாளிதழிடம் கல்வித் துறை தலைமை இயக்குநர் ஹபிபா அப்துல் ரஹிம் கூறினார்.

#தமிழ்முரசு #மலேசியா #இலவச #காலைஉணவு