இரண்டு வயது மகள் கொலை: பெண் மீது குற்றச்சாட்டு

ஜோகூர் பாரு:  தமது  இரண்டு வயது மகளைக் கொலை செய்ததாக 22 வயதுப் பெண் மீது ஜோகூர் பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நூருல் ஷமீரா மஸ்லான் எனும் ஒற்றைப் பெற்றோரான அந்த மலேசியப் பெண் அவரது ஒரே குழந்தையான நூர் ஷஹானா அப்துஸ் குத்துஸை, வேண்டுமென்றே தாக்கி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனையில் இம்மாதம் 13ஆம் தேதி குழந்தை இறந்து போனது. குழந்தையின் உடலில் இருந்த காயங்களைக் கண்டு மருத்துவமனையின் சார்பில் போலிசில் புகார் அளிக்கப்பட்டது. 

நூருல் ஷமீராவும் அவரது 33 வயதான ஆண் நண்பரும் ஜனவரி 14ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். 

தற்போது பிணையில் வெளிவந்திருக்கும் ஆண் நண்பர், வழக்கில் சாட்சியாகப் பங்கெடுப்பார் என்று ‘நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ குறிப்பிட்டது. குற்றம் நிரூபிக்கப் பட்டால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.