அரசு சார்பற்ற மலேசிய அமைப்பைச் சாடிய அமைச்சு

சிங்கப்பூரில் மரண தண்டனை கைதிகள் தூக்கிலிடப்படும் முறை குறித்து மலேசியாவைச் சேர்ந்த அரசு சார்பற்ற அமைப்பான லாயர்ஸ் ஃபார் லிபர்ட்டியின் (எல்எஃப்எல்) குற்றச்சாட்டுகள் உண்மையற்றவை என்றும் அபத்தமானவை என்றும் சிங்கப்பூர் உள்துறை அமைச்சு சாடியுள்ளது.

இந்த உண்மையற்ற குற்றச்சாட்டுக்கு எதிராக பொஃமா எனப்படும் இணையவழி பொய்ச்செய்திக்கும் சூழ்ச்சித் திறத்துக்கும் எதிரான பாதுகாப்புச் சட்டத்தை அமைச்சு பயன்படுத்தியுள்ளது. பொய்ச் செய்தியைத் திருத்தும்படி குற்றச்சாட்டை முன்வைத்த எல்எஃப்எல் அமைப்புக்கும் அதைப் பகிர்ந்துகொண்ட சிங்கப்பூர் ஆர்வலர் கெர்ஸ்டன் ஹான், தி ஆன்லைன் சிட்டிசன் இணையத்தளம், யாஹு சிங்கப்பூர் ஆகிய மூன்று தரப்பினர்களுக்கும் அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2ஆம் தேதியன்று நடைமுறைப்படுத்தப்பட்டதிலிருந்து பொஃமா சட்டம் ஐந்தாவது முறையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் மரண தண்டனை கைதிகள் தூக்கிலிடப்படும்போது கயிறு அறுந்தால் அதை மூடிமறைக்க, அந்தக் கைதியின் பின் கழுத்தைப் பலங்கொண்டு உதைத்து முறிக்க சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக எல்எஃப்எல் அமைப்பு இம்மாதம் 16ஆம் தேதியன்று அறிக்கை வெளியிட்டது.

சட்டத்துக்குப் புறம்பான இத்தகைய நடவடிக்கைகளை சிங்கப்பூர் அரசாங்கம் அனுமதிப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. சிங்கப்பூரின் அனைத்து மரண தண்டனைகளும் சட்டப்படி நிறைவேற்றப்படுவதாக அமைச்சு வலியுறுத்தியது.

“சிறைச்சாலைக் கண்காணிப்பாளர், மருத்துவர் முதலியோர் முன்னால் அனைத்து மரண தண்டனைகளும் நிறைவேற்றப்படுகின்றன. மேலும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட 24 மணி நேரத்துக்குள் மரண விசாரணை அதிகாரி உடலைப் பரிசோதனை செய்து மரண தண்டனை முறையாக நிறைவேற்றப்பட்டதை உறுதி செய்ய வேண்டும்,” என்று அமைச்சு கூறியது.

“மரண தண்டனைக்காகப் பயன்படுத்தப்பட்ட கயிறு இந்நாள் வரை ஒருமுறைகூட அறுந்ததில்லை.

மரண தண்டனையை மூர்க்கத்தனமாக நிறைவேற்ற சிறை அதிகாரிகளுக்கு எவ்வித சிறப்புப் பயிற்சியும் அளிக்கப்படவில்லை. எல்எஃப்எல் கூறுவது போன்ற நிகழ்வுகள் நடந்திருந்தால் அவற்றை நாங்கள் முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுத்திருப்போம்,” என்று அமைச்சு தெரிவித்தது.

பரபரப்புமிக்க, உண்மையற்ற செய்திகளை வெளியிடும் பழக்கம் எல்எஃப்எல் அமைப்புக்கு இருப்பதாக அமைச்சு கூறியது. சிங்கப்பூருக்குள் போதைப்பொருள் கடத்திய குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள மலேசியர்களைக் காப்பாற்ற அது அவ்வாறு நடந்துகொள்வதாக அமைச்சு கூறியது.

“சிங்கப்பூருக்குள் போதைப்பொருளைக் கடத்துபவர்கள் பல சிங்கப்பூரர்களின் வாழ்க்கையைச் சீர்குலைக்கின்றனர். தங்கள் குற்றத்துக்கான தண்டனையை அனுபவிக்க இந்தப் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தயாராக இருக்க வேண்டும்,” என்று அமைச்சு கூறியது. சிங்கப்பூருக்குள் போதைப்பொருள் கடத்திய குற்றத்துக்காகக் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் மலேசியரான அப்துல் ஹெல்மி அப்துல் ஹல்மிவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

அதிபரிடம் தாக்கல் செய்யப்பட்ட கருணை மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து அவர் தூக்கிலிடப்பட்டார்.

சிங்கப்பூரில் பிடிபடும் போதைப்பொருள் கடத்தல்காரர்களில் 30 விழுக்காட்டினர் மலேசியர்கள் என கடந்த ஆண்டு மே மாதத்தில் சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் தெரிவித்தார்.

“சிங்கப்பூரில் நிறைவேற்றப்படும் மரண தண்டனை குறித்து பொய்ச் செய்தி வெளியிட்டோர் அவர்களது பதிவுக்குப் பக்கத்தில் திருத்த அறிக்கையைப் போட வேண்டும். தங்களது பதிவில் பொய்ச் செய்திகள் அடங்கியிருப்பதாக அவர்கள் குறிப்பிட வேண்டும்,” என்று அமைச்சு தெரிவித்தது. தனது பதிவுக்கு அருகில் திருத்த அறிக்கை போட வேண்டும் என்ற உத்தரவை நீக்கக்கோரி தி ஆன்லைன் சிட்டிசன் இணையத்தளம் மனு தாக்கல் செய்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!