சுடச் சுடச் செய்திகள்

கொரோனா கிருமித் தொற்று: மலேசியாவில் மேலும் இருவருக்குப் பாதிப்பு

கோலாலம்பூர்: மலேசியாவில் மேலும் இருவருக்கு கொரோனா கிருமி தொற்றியிருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் நேற்று அறிவித்தனர். இதனால் மலேசியாவில் இதுவரை மொத்தம் 14 பேருக்கு கொரோனா கிருமித் தொற்று ஏற்பட்டுள்ளது.

அந்த இரண்டு நோயாளிகளின் மருத்துவப் பரிசோதனை முடிவுகள் நேற்று முன்தினம் வெளிவந்ததாகவும் அவற்றில் அவர்களுக்கு கொரோனா கிருமித் தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்ததாகவும் அதிகாரிகள் கூறினர்.

பாதிப்படைந்த அந்த இருவரில் சீனாவின் வூஹான் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் அடங்குவார். அவர் மலேசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது நோய்வாய்ப்பட்டதாக அறியப்படுகிறது. பாதிப்படைந்த மற்றொருவர் மலேசியாவைச் சேர்ந்த பெண். அவர் மலேசியாவில் கொரோனா கிருமித் தொற்றால் பாதிப்படைந்த முதல் நபருடன் தொடர்பில் இருந்தவர்.

பாதிப்படைந்த அந்த 37 வயது சீன சுற்றுப்பயணி கடந்த மாதம் 25ஆம் தேதியன்று மலேசியா வந்தடைந்ததாக மலேசிய சுகாதார அமைச்சர் ஸுல்கிஃப்லி அகமது செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அவருடன் நான்கு பேர் வந்ததாகவும் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பிரதான சுற்றுப்பயணத் தளங்களுக்கு அவர்கள் சென்றிருந்ததாகவும் அவர் கூறினார்.

இலேசான காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து அந்தப் பெண் இம்மாதம் 1ஆம் தேதியன்று மருத்துவமனைக்குச் சென்றதாக தெரிவிக்கப்பட்டது. அவர் தங்கியிருந்த இடத்துக்குத் திரும்ப அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் தம்முடன் வந்திருந்த நான்கு பேருடன் வெளியே எங்கும் செல்லாமல் சுயமாக தனிமைப்படுத்திக்கொள்ளும்படி மருத்துவ அதிகாரிகள் அவரிடக் தெரிவித்தனர்.

இதற்கிடையே, கிருமித் தொற்றால் பாதிப்படைந்துள்ள மலேசியப் பெண் சிங்கப்பூரில் சீனப் பேராளர்கள் கலந்துகொண்ட மாநாட்டுக்குச் சென்றிருந்த மலேசியரின் தங்கை ஆவார். அந்தப் பெண் தற்போது கெடாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அந்த 40 வயது மலேசியப் பெண்ணுக்கு இம்மாதம் 1ஆம் தேதியன்று கொரோனா கிருமித் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதை

அடுத்து, சிகிச்சை பெற்றுக்கொள்ள அவர் தனியார் மருந்தகத்துக்குச் சென்றார். 

அவரது அண்ணனுக்கு கொரோனா கிருமித் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதும் அப்பெண் அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது மற்ற குடும்பத்தினர் கொரோனா கிருமித் தொற்றால் பாதிப்படையவில்லை என்று மருத்துவப் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

சுயமாக தனிமைப்படுத்திக்கொள்ள கூறப்பட்டிருப்பவர்கள் தங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள உத்தரவை மீறாமல் இருக்க வேண்டும் என்று டாக்டர் ஸுல்கிஃப்லி கூறினார். 

இந்நிலையில், நாளை பத்து

மலையில் நடைபெற இருக்கும் தைப்பூசத் திருவிழாவைப் பற்றி கவலை எழுந்துள்ளது. பத்துமலையில் நடைபெற இருக்கும் தைப்பூசத் திருவிழாவைக் காண ஆயிரக்கணக்கான மலேசியர்களும் வெளிநாட்டவர்களும் திரள்வார்கள் என டாக்டர் ஸுல்கிஃப்லி தெரிவித்தார்.

“தைப்பூசத் திருவிழாவுக்குச் செல்லும் பக்தர்களும் மற்றவர்களும் தங்கள் தனிப்பட்ட சுகாதாரத்துக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். கொரோனா கிருமி பரவாமல் இருக்க அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் சோப் பயன்படுத்தி தங்கள் கைகளை அடிக்கடி கழுவ  வேண்டும் அல்லது கிருமி நாசினியைப் பயன்படுத்தி தங்கள் கைகளைச் சுத்தப்படுத்த வேண்டும். மேலும் முகக்கவசங்களை அணிந்து கொள்ள வேண்டும்,” என்றார் அமைச்சர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon