பிடியை மேலும் வலுவாக்கிக்கொண்ட மகாதீர்

கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் பதவியிலிருந்து டாக்டர் மகாதீர் முகம்மது விலகி, பின்னர் மாமன்னரால் இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்ட மறுநாளான நேற்று அவரைத் தேடி பல்வேறு எதிர்த் தரப்பு அரசியல் குழுக்கள் அவரது ஆதரவைப் பெற பிரதமர் அலுவலகத்துக்குப் படையெடுத்தன.

அடுத்த புதிய அமைச்சரவையை அமைக்கும் பொறுப்பு இப்போது டாக்டர் மகாதீரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால், அவர் எடுக்கும் எந்த முடிவுக்கும் மாமன்னர் ஒப்புதல் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதன் மூலம் டாக்டர் மகாதீர் தனது செல்வாக்குப்பிடியை மேலும் வலுவாக்கிக்கொண்டுள்ளார்.

டாக்டர் மகாதீர் தமது 94வது வயதில் உலகில் ஆக வயதான அரசாங்கத் தலைவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். 

தமது பழைய வைரியான 72 வயது திரு அன்வார் இப்ராகிமுடன் பதற்றமான கூட்டணி அமைத்துக்கொண்ட டாக்டர் மகாதீர் 2018ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலை எதிர்கொண்டு அதில் வெற்றி பெற்றார்.

கூட்டணி ஒப்பந்தத்தின்படி அவர் ஈராண்டுகளுக்குப் பிறகு பிரதமர் பதவியை திரு அன்வார் இப்ராகிமுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் என்பது கூட்டணியின் நிபந்தனைகளில் ஒன்று. 

ஆனால் அந்த பதவி ஒப்படைப்பு எப்போது என்று டாக்டர் மகாதீர் தெளிவாகக் குறிப்பிட்டதில்லை. இதுவே திரு அன்வாரின் பிகேஆர் கட்சி உறுப்பினர்களிடத்திலும் தொண்டர்களிடத்திலும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்தப் புகைச்சல் நாளுக்கு நாள் பெரிதாகிக்கொண்டே இருந்த வேளையில், கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த பெர்சத்து கட்சி கூட்டத்துக்குப் பிறகு, பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியிலிருந்து தமது பெர்சத்து கட்சி விலகிக்கொள்ள முடிவெடுத்துள்ளது என்ற அதிர்ச்சி செய்தியைத் தெரிவித்த டாக்டர் மகாதீர், பெர்சத்து கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்தும் விலகினார்.

நேற்று முன்தினம் இடைக்கால பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு டாக்டர் மகாதீர், முதல் நடவடிக்கையாக நடப்பு அமைச்சரவையைக் கலைத்தார். இது திரு அன்வார் அடுத்த பிரதமராகும் வாய்ப்பை இப்போதைக்கு கவிழ்த்துவிட்டது.

இடைக்கால பிரதமர் என்ற முறையில், புதிய அரசாங்கத்தை அமைக்க இதர அரசியல் கட்சி களையும் டாக்டர் மகாதீர் சேர்த்துக்கொள்ள வாய்ப்புண்டு.

பெர்சத்து கட்சி, ஜனநாயக செயல் கட்சி, அம்னோ, பாஸ், பிகேஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் திரு அஸ்மின் அலியின் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு என பல தரப்பிலும் டாக்டர் மகாதீர் தொடர்ந்து பிரதமர் பதவியை வகிக்க ஆதரவு தெரிவித்துள்ளது அவரது பலத்தை மேலும் உயர்த்தியிருக்கிறது.

திரு அன்வாரும் அவரது பிகேஆர் கட்சி நாடாளுமன்ற உறுப் பினர்களும், மாமன்னரின் ஆலோசனைக்கேற்ப தாங்கள் செயல்படப் போவதாகத் தெரிவித்துள்ளனர்.

டாக்டர் மகாதீர், பிரதமராகத் தொடர மாமன்னரும் விரும்பினால் அவர் மலேசியாவின் பிரதமராக மூன்றாம் முறையாகப் பதவியேற்கக்கூடும் என்பதும் கவனிக்கத்தக்க ஒன்று.