மலேசிய அரசியல் நெருக்கடியால் பொருளியல் பாதிப்பு

கோலாலம்பூர்: அனைத்துலக ரீதியில் ஏற்பட்டு வரும் ஆபத்துகளால் மலேசியாவின் பொருளியல் ஒரு நிச்சயமற்ற நிலையில் உள்ளது. அத்துடன் மலேசிய மக்கள் உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவுகளாலும் அதிருப்தியில் இருக்கின்றனர். இந்நிலையில் மலேசியாவின் அரசியல் ஆட்டங்கண்டுள்ளது பொருளியலை மேலும் நெருக்குவதாகக் கூறப்படுகிறது.

மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மதுவுக்கும் அவருக்குப் பின் பிரதமராகவிருந்த அன்வார் இப்ராகிமுக்கும் இடையிலான ஆட்சிப் போராட்டத்திற்கு இடையே நேற்று முன்தினம் ஆளும் கூட் டணி உடைந்தது.

இந்த நிச்சயமற்ற அரசியல் நிலையால் பொருளியல் கொள்கைகள் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. கொரோனா கிருமித்தொற்று பரவலை எதிர்கொள்வதற்கான ஊக்கத் திட்டம் குறித்து திரு மகாதீர் நாளை அறிவிப்பதாக இருந்தது.

ஆனால் அத்திட்டத்தின் சலுகைகள் தற்போதைய நிலையில் அறிவிக்கப்படாது. 

திட்டத்திற்கு முன்னாள் நாடாளுமன்றம் தன் ஒப்புதலை வழங்காத பட்சத்தில் அதைப் பற்றி அறிவிக்க முடியாது என்றார் துணை வர்த்தக அமைச்சராக இருந்த ஓங் கியன் மிங்.

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் பெரும்பாலான துறைகளுக்குக் கிட்டவேண்டிய உதவி தாமதிக்கப்படும் என்றார் அவர்.

நாட்டின் வர்த்தகம் மற்றும் சுற்றுப்பயண வருகை முதலியவை கொரோனா கிருமித்தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டன. 

இதற்கிடையே தற்போதைய அரசியல் நெருக்கடியும் எழுந்துள்ளது. ஆனால் இச்சிக்கல்கள் ஏற் படுவதற்கு முன்னரே மலேசிய மக்களுக்கிடையே பொருளியல் தொடர்பான அதிருப்தி நிலவி வந்தது.

வாழ்க்கைச் செலவுகள், வேலையின்மை, பணவீக்கம் போன்ற விவகாரங்கள் மக்களுக்குக் கவலை கொடுத்து வருகின்றன என்றும் அவற்றில் அரசாங்கம் போதிய கவனம் செலுத்தவில்லை என்றும் கெடாவிலுள்ள ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியர் கூறியிருந்தார்.

இதனால் புதிதாக ஆட்சி அமைக்கும் அரசாங்கம் உடனே மக்களின் கவலைகளுக்குத் தீர்வு காண்பதுடன் கொரோனா கிருமியால் ஏற்படக்கூடிய மிரட்டல் களையும் சமாளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.