அரண்மனைக்கு வர நஜிப்புக்கு அழைப்பு;  வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

கோலாலம்பூர்: தேசிய அரண்மனைக்கு வரத் தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் ‘எஸ்ஆர்சி இன்டர்நேஷனல்’ வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

நேற்று காலை நஜிப் அரண்மனைக்கு வர அழைப்பு வந்ததாகவும் அம்னோ தலைமையகத்தில் நடந்த கூட்டத்திற்குப் பிறகு நஜிப்பைச் சந்திக்கும் நேரம் மாற்றப்பட்டதாகவும் அவரின் தலைமைத் தற்காப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். கட்சிக் கூட்டத்தில் அவர் இருப்பது கட்டாயம் என்றும் கூறப்பட்டது. இதனால் உயர் நீதிமன்றம் வழக்கு விசாரணையை இன்றைக்குத் தள்ளிவைத்துள்ளது. இதற்கிடையே தற்காப்புத் தரப்பு சாட்சியான ரோஸ்மான் அப்துல்லா சாட்சியம் சொல்லத் தயாராக இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் தற்காப்புத் தரப்பு தன் சாட்சியை விசாரிக்க முடியாத சூழ்நிலை எழுந்துள்ளதாகவும் நஜிப்பின் வழக்கறிஞர்கள் கூறினர்.