சொந்தக் கட்சியிலிருந்து அன்வாருக்கு வலுவான ஆதரவு

மலேசியாவின் கெஅடிலான் ராக்யாட் கட்சியின் தலைவர் அன்வார் இப்ராஹிம் அந்நாட்டின் அடுத்தப் பிரதமராகப் பதவி வகிப்பதை பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்துள்ளனர். மலேசியாவின் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு எந்தத் தரப்புக்கு அதிகாரம் உள்ளது என்பதை அந்நாட்டின் மாமன்னர் உறுதி செய்துவரும் வேளையில் இந்தத் தகவல் வெளிவந்துள்ளது.

மூன்று கட்சிகள் அங்கம் வகிக்கும் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியைச் சேர்ந்த 92 எம்பிக்கள் மாமன்னரிடம் பேசியபோது அவர்கள் அனைவரும் திரு அன்வாரையே ஆதரிப்பதாக ஸ்ட்ரெஸ்ட் டைம்ஸ் நாளிதழ் கூறியது.

டாக்டர் மகாதீர் முகம்மதின் ப்ரிபூமி பெர்சாத்து கட்சியைச் சேர்ந்த சிலரும் பிகேஆர் கட்சியின் கிளர்ச்சி உறுப்பினர்கள் சிலரும் எதிரணிக்குக் கட்சி மாறியதை அடுத்து அவர் நேற்று முன்தினம் பதவி விலகினார். இருந்தபோதும், தற்போதைய அரசியல் குழப்பம் தீரும்வரை அவர் மாமன்னரால் இடைக்காலப் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

மலேசிய மாமன்னர் இன்று மாலைக்குள் 222 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருடனும் பேசி முடிக்கப்போவதாகக் கூறப்படுகிறது. மலேசிய மாமன்னர் ஒருவர் இப்படி ஒரு நடவடிக்கையை எடுப்பது அந்நாட்டின் வரலாற்றில் முதல் முறை.அவர்களில் 132 எம்பிக்கள், இடைக்காலப் பிரதமராகத் தொடர்ந்து பணியாற்ற டாக்டர் மகாதீரை ஆதரிக்கிறார்களா அல்லது உடனடியாக தேர்தலை நடத்தி அதன் மூலம் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறார்களா என்பதை மாமன்னரிடம் தெரிவிக்கப்போகின்றனர். 

2018ல் டாக்டர் மகாதீர் பக்கத்தான் ஹரப்பானை வெற்றிக்கு இட்டுச் சென்று மலேசியாவின் ஏழாவது பிரதமராகப் பதவியேற்றார்.