‘பிரதமராக யாருக்கும் பெரும்பான்மை இல்லை'

மலேசியாவின் 222 நாடாளுமன்ற உறுப்பினர்களில் யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காததால்  மலேசியாவின் பிரதமர் யார் என்பது பற்றி அடுத்த மாதம் 2ஆம் தேதி கூடும் நாடாளுமன்றத்தில் முடிவு செய்யப்படும் என்று மலேசியாவின் இடைக்காலப் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது கூறியுள்ளார்.

முன்னதாக, இன்று காலை மாமன்னரைச் சந்தித்த அவர், இன்று மாலை இந்தத் தகவலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

“அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தனித்தனியாகச் சந்தித்த மாமன்னர் அவர்களது ஆதரவு யாருக்கு என்பதைப் பற்றி கேட்டார். ஆனால், யாருக்கு தனிப்பெரும்பான்மை உள்ளது என்பதை மன்னரால் கண்டறிய முடியவில்லை. அதனால், இது குறித்து முடிவெடுக்க சரியான இடம் நாடாளுமன்றம்தான்  என்று மன்னர் கூறியுள்ளார்,” என்றார் திரு மகாதீர். 

நம்பிக்கை வாக்கெடுப்பில் உறுதியான முடிவு எட்டப்படவில்லை என்றால், திடீர்த்தேர்தல் நடத்த மாமன்னர் அழைப்புவிடுக்கலாம் என்று 94 வயதான டாக்டர் மகாதீர் குறிப்பிட்டார்.

#மலேசியா #பிரதமர் #மகாதீர் #இடைக்காலத் தேர்தல் #தமிழ்முரசு