14 நாட்களுக்குப் பின்னர் கொரோனா கிருமி இருந்தாலும் நோயாளிகளை வீட்டுக்கு அனுப்பும் மலேசியா

கொவிட்-19 கிருமித்தொற்றுக்காக சிகிச்சை எடுத்துக்கொண்ட நோயாளிகள் இரண்டு வாரத்திற்குப் பின்னர் தொற்று நீங்காத நிலையிலும் அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என மலேசியா தெரிவித்து உள்ளது.

ஒருமுறை கிருமித்தொற்றுக்காக சிகிச்சை எடுத்துக்கொண்டோருக்கு மீண்டும் தொற்று ஏற்ட்டால் அது மற்றவருக்குப் பரவும் சாத்தியமில்லை என மலேசிய சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறியுள்ளார்.

சிகிச்சை பெற்றுவரும் கொவிட்-19 நோயாளிக்கு 13வது நாளில் பரிசோதனை நடத்தப்படும். அப்போதும் அவருக்குக் கிருமித்தொற்று இருந்தால் அவருக்கான சிகிச்சை தொடரும் என்னும் வழக்கத்தில் மாற்றம் செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டு உள்ளார்.

“உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி 14வது நாள் சிகிச்சைக்குப் பிறகு அவர்களைத் தொற்றியிருக்கும் கிருமி வேறு யாருக்கும் பரவாது. எங்களுக்குக் கிடைத்துள்ள அந்தப் புதிய நடைமுறையை நாங்கள் பின்பற்றுவோம்.

“14 நாட்களுக்குப் பிறகு கிருமித்தொற்று காணப்பட்டாலும் அந்த நோயாளி மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார் என டாக்டர் நூர் தனது அன்றாட செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

“14 நாட்களைக் கடந்த பின்னர் கிருமியின் வீரியம் குறையத் தொடங்கும் அல்லது இறந்த கிருமியின் பாகங்கள் இருக்கும். அதுபோன்ற வேளைகளில் நோயாளியின் உடலில் கிருமி இருப்பதாகவே பரிசோதனைகள் காட்டும்.

“ஒரு நோயாளியை மருத்துவமனையிலிருந்து விடுவிக்கும் முன்னர் 13வது நாளில் அவரிடமிருந்து மாதிரிகளைச் சேகரிப்போம். 24 மணி நேரத்தில் இரு முறை அவரிடம் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்படும்.

“அந்த இரு மாதிரிகளுமே கிருமித்தொற்று இல்லை என உணர்த்தினால் மட்டுமே அவரை வீட்டுக்கு அனுப்புவோம்.
“இதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த நடைமுறை இது. இப்போது இதனை மாற்றிக்கொண்டு உள்ளோம். 14 நாட்களுக்குப் பின்னர் இரண்டு மாதிரிகளில் ஒன்று கிருமித்தொற்று இல்லை என்று உணர்த்தினாலே போதும். அவரை வீட்டுக்கு அனுப்பிவிடுகிறோம்,” என்று டாக்டர் நூர் கூறினார்.

மலேசியாவில் நேற்று புதிதாக 15 பேருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. மரணம் எதுவும் பதிவாகவில்லை. பாதிக் கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 7,619க்கு உயர்ந்து உள்ளது. இதுவரை 15 பேர் உயிரிழந்துவிட்டனர். 6,083 பேர் குணம் அடைந்து வீடு திரும்பிவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

 

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online