'குடும்ப உறுப்பினர்கள் மறைவுக்கு சிங்கப்பூரில் பணியாற்றும் மலேசியர்கள் செல்ல அனுமதி; 3 மணி நேரம் மட்டும் இருக்கலாம்'

நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் உயிரிழந்தால், அவர்களது இறுதிச் சடங்கில் பங்கேற்க, சிங்கப்பூரில் வசிக்கும் மலேசியர்களுக்கு மலேசிய அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

அவசரம் என்பதால் அவ்வாறு செல்வோர் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள். ஆனால், அவர்கள் அதிகபட்சம் மூன்று மணி நேரத்துக்கு மட்டுமே அங்கு இருக்க முடியும். அத்துடன் அவர்கள் தனிநபர் பாதுகாப்புக் கவசத்தை அணிந்திருக்க வேண்டும்.

இந்தத் தகவல்களை மலேசியாவின் மூத்த பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நேற்று முன்தினம் (மே 26) தெரிவித்தார்.

அவர்களை முதல்நிலைப் பணியாளர்கள் குடும்ப உறுப்பினர்களிடம் அழைத்துச் செல்வர்; பின்னர் அவர்கள் சிங்கப்பூருக்குத் திரும்பிச் செல்வர் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

இத்தகைய சம்பவங்கள் ஏற்கெனவே நிகழ்ந்திருப்பதாகவும் தற்போது நடப்பில் இருக்கும் நடைமுறைகள் இவை என்றார் அவர்.

ஆனால், அவ்வாறு சிங்கப்பூருக்குத் திரும்பிய பிறகு அவர்கள் சிங்கப்பூரில் தனிமைப்படுத்தப்படுவார்களா என்பதை சிங்கப்பூர் அதிகாரிகள்தான் முடிவு செய்யவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரில் பேருந்து ஓட்டிக்கொண்டிருந்த பெண் ஓட்டுநர்,  மலேசியாவில் தம் கணவர் உயிரிழந்ததையடுத்து, சொந்த ஊர் திரும்ப வேண்டி உருக்கமான கோரிக்கை வைத்தபோது அவருக்கு உதவத் தயாராக இருப்பதாக சிங்கப்பூரில் உள்ள மலேசிய தூதரகம் தெரிவித்திருந்தது.

தாம் ஓட்டிச் சென்ற பேருந்தை பேருந்து நிலையத்துக்கு அருகில் நிறுத்திவிட்டு, தம் இருக்கையில் அமர்ந்த்வாறே கதறி அழுத அந்தப் பெண்ணுக்கு அந்த வழியாகச் சென்ற இருவர் உதவியதுடன் உதவிக்கு ஆள் வரும் வரை உடன் இருந்தனர்.

இந்தக் கடினமாக காலகட்டத்தைக் கடக்க அந்தப் பெண்ணுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருவதாக டவர் டிரான்சிட் பேருந்து நிறுவனம் பெர்னாமா செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தது.

 

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online