டாக்டர் மகாதீரும் அவரது ஆதரவாளர்களும் பெர்சத்து கட்சியிலிருந்து நீக்கம்

கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் முகைதீன் யாசினின் அரசாங்கத்தை ஆதரிக்க மறுத்த முன்னாள் மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது, பெர்சத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருடன் மேலும் நான்கு ஆதரவாளர்களும் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

பெர்சத்து கட்சியை 2016ஆம் ஆண்டில் நிறுவியவர்களில் டாக்டர் மகாதீரும் ஒருவர். அவருடன் இணைந்து கட்சியை ஆரம்பித்த மற்றொருவர் தற்போது கட்சியின் தலைவராக உள்ள மலேசியப் பிரதமர் முகைதீன் யாசின்.

இம்மாதம் 18ஆம் தேதியன்று நடந்த நாடாளுமன்ற அமர்வில் டாக்டர் மகாதீர் கலந்துகொண்டதாகவும் எதிர்க்கட்சித் தரப்புக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அவர் அமர்ந்ததாகவும் கூறப்பட்டது.

இதனால் பெர்சத்து கட்சி உறுப்பினர் தகுதியை திரு மகாதீர் உடனடியாக இழந்துவிட்டதாக குறிப்பிடப்பட்ட கடிதம் ஒன்று அவருக்குத் தரப்பட்டது.

இதே சொற்களுடைய கடிதங்கள் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட மற்ற நான்கு ஆதரவாளர்களுக்கும் தரப்பட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கண்டறிந்தது.

வெளியேற்றப்பட்ட மற்ற நான்கு பேரில் டாக்டர் மகாதீரின் மகன் முக்ரிஸ் மகாதீரும் ஒருவர்.

இவர் இம்மாதம் கெடா மாநிலத்தின் முதலமைச்சர் பதவியை இழந்தார்.

டாக்டர் மகாதீர், அவரின் மகன் முக்ரிஸ் மகாதீர் ஆகியோருடன் பெர்சத்து இளையர் தலைவர் சையது சடிக், பெர்சத்து உச்ச மன்ற உறுப்பினர்களான திரு அமிருதீன் ஹம்ஸா மற்றும் டாக்டர் மஸ்லி மாலிக் என்ற மூவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஐவரும் கட்சியின் நிர்வாகச் செயலாளர் சுஹைமி யாஹ்யாவிடமிருந்து அதிகாரத்துவ கடிதங்களைப் பெற்றதாக அறியப்படுகிறது.

மற்ற கட்சிகளில் சேரும் உறுப்பினர்கள் உடனே நீக்கப்படுவர் என்ற பெர்சத்து கட்சி விதிகளை மீறியதன் தொடர்பில் டாக்டர் மகாதீரும் அவரின் மகனும் வெளியேற்றப்படுவர் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் இம்மாதம் 11ஆம் தேதியன்று வெளியிட்ட செய்தி இப்போது உறுதியாகிவிட்டது.