திடீர் தேர்தலுக்கு மலேசிய பிரதமர் முகைதீன் திட்டம்

மலேசியாவில் இவ்வாண்டு இறுதிக்குள் பொதுத் தேர்தலை நடத்த அந்நாட்டுப் பிரதமர் முகைதீன் யாசின் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.

பெர்சத்து கட்சியை உடைத்து, தேசிய முன்னணி மற்றும் ‘பாஸ்’ கட்சி ஆதரவுடன் ‘பெரிக்காத்தான் நேஷனல்’ என்ற புதிய கூட்டணியை அமைத்து, கொல்லைப்புறம் வழியாக அதிகாரத்தைப் பிடித்துவிட்டதாகவும் பெரும்பான்மை ஆதரவின்றி பதவியில் நீடித்து வருவதாகவும் தம் மீது குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில், அதற்கு முடிவுகட்ட திரு முகைதீன் தீர்மானித்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

பெர்சத்து கட்சியின் தலைவரான திரு முகைதீன், இம்மாதம் 4ஆம் தேதி நடந்த உச்ச மன்றக் கூட்டத்தின்போதும் அதற்கடுத்த நாட்களில் கட்சியின் மாநிலத் தலைவர்களைச் சந்தித்தபோதும் தமது நோக்கங்களைத் தெளிவாகக் கூறிவிட்டதாக கட்சி வட்டாரங்களைச் சுட்டி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

‘பெரிக்காத்தான் நேஷனல்’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள பல கட்சிகளும் புதிய தேர்தல் கூட்டணி உடன்பாட்டைச் செய்துகொள்ளும் முயற்சியில் இறங்கி உள்ள நிலையில், திடீர் தேர்தல் குறித்த செய்தி வெளியாகி இருக்கிறது.

“அடித்தள அமைப்புகளை பிரதமர் சந்தித்து வருவதாகவும் தேர்தலுக்கு ஆயத்தமாகும்படி கட்சித் தலைவர்கள் அனைவரையும் அறிவுறுத்தி வருவதாகவும்’ பெர்சத்து உச்ச மன்ற உறுப்பினர் வான் சைஃபுல் வான் ஜன் உறுதிப்படுத்தியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.

“கொரோனா பரவல் நிலவரம் மேம்பட்டதும் கூடிய விரைவில் பொதுத் தேர்தலை நடத்தும் யோசனையை நான் வரவேற்கிறேன். அப்படிச் செய்வதன்மூலம் கொல்லைப்புற அரசாங்கம் என்ற அவதூறுப் பிரசாரத்தையும் முடிவுக்குக் கொண்டு வருவதுடன், நிலையான ‘பெரிக்காத்தான் நேஷனல்’ அரசாங்கம் அமையவும் அது உதவும்,” என்றார் திரு வான் சைஃபுல்.

வாக்குகளைக் கவரும்விதமாக இவ்வாண்டு இறுதிக்குள் ‘தேர்தல் பட்ஜெட்’டை அறிவித்துவிட்டு, நாடாளுமன்றத்தைக் கலைக்கும் திட்டமும் இருப்பதாகப் பேச்சு அடிபடுகிறது.

மலேசியாவில் நிலவும் அரசியல் நிலைத்தன்மையின்மைக்கு முடிவு கட்டும் விதமாக பொதுத் தேர்தலை எதிர்கொள்ளத் தயார் என்று அம்னோ தலைவர் ஸாகிட் ஹமிடியும் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கும் கடந்த வாரம் கூறியிருந்தனர்.

மகாதீரின் ‘புதிய’ கட்சி: மலேசிய அரசியல்வாதிகளை நையாண்டி செய்யும் விதமாக, புதிய கட்சி ஒன்றைத் தொடங்க விரும்புவதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் மகாதீர் தெரிவித்துள்ளார். ‘எனக்கு என்ன கிடைக்கும்?’ என்று அந்தக் கட்சிக்கு பெயர் வைக்கப்படும் என்று அவர் கிண்டலாகக் கூறினார்.

பிரதமர் பதவியைத் தக்கவைத்துக்கொள்ள திரு முகைதீன், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர், துணை அமைச்சர், அரசாங்கம் தொடர்புடைய நிறுவனங்களின் தலைவர் போன்ற பதவிகளைத் தந்து ஆதரவு திரட்டுவதாக டாக்டர் மகாதீர் குற்றம் சுமத்தியுள்ளார். நிறைய பணம் சம்பாதிக்க ஆசைப்படுவோருக்காக புதிய கட்சி தொடங்கவுள்ளதாகவும் அதில் சேருவோருக்கு கட்சியில் உயர் பதவி வழங்கப்படும் என்றும் அவர் கிண்டலாகக் கூறியுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!