சுடச் சுடச் செய்திகள்

மலேசியாவில் ஆள்கடத்தலின் தொடர்பில் முன்னாள் அரசியல்வாதி உட்பட 6 பேர் மீது குற்றச்சாட்டு

ராவாங்குக்கு அருகில் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்ட திரு ஆர். ஆறுமுகத்தைக் கடத்தியதன் தொடர்பில் அரசியல்வாதி ஒருவர் உட்பட ஆறு பேர் மீது இன்று (ஜூலை 9) மலேசியாவின் குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

K. ராமச்சந்திரன், 50; அஸாரி ஷரோம் ஷைமி, 56; முகமது துரை அப்துல்லா, 52; ஷேக் இஸ்மாயில் ஷேக் ஹசன், 26; N. விக்னேஸ்வரர், 28; பங்ளாதேஷ் நாட்டவரான 42 வயது காசி நஸ்ருல் ஆகியோர் அந்த அறுவர்.

சொத்து மேம்பாட்டாளரான திரு ஆறுமுகத்தைக் கடத்துவதற்கு மற்ற ஐவரையும் ராமச்சந்திரன் உதவிக்கு வைத்துக்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

இன்று காலை 9.40 மணியளவில் நீதிமன்றத்துக்கு வந்தபோது ஆறு பேரும் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது.

அஸாரி ஷரோம் ஷைமி, முகமது துரை அப்துல்லா, ஷேக் இஸ்மாயில் ஷேக் ஹசன், விக்னேஸ்வரர், காசி நஸ்ருல் ஆகியோர் $50 மில்லியன் (RM153 மில்லியன்) பிணைப்பணம் கோரும் நோக்கில் ஆறுமுகத்தைக் கடத்தியதாக நீதிமன்ற ஆவணத்தில் குறிப்பிடப்பட்டது.

பண்டார் ஸ்ரீ டாமன்சராவில் உள்ள ஜாலான் மர்கோசாவில் உள்ள ஒரு விளையாட்டுத் திடலில் ஜூன் 3ஆம் தேதி காலை 10.30 மணியளவில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது அவர்கள் இந்தக் குற்றத்தைப் புரிந்ததாகக் கூறப்பட்டது.

பாட்டாங் காலி மாநிலத்தில் நாட்டின் 13வது பொதுத் தேர்தலில் பிகேஆர் கட்சியின் சார்பில் வேட்பாளராக ராமச்சந்திரன் இருந்தது குறிப்பிடத்தக்கது. குற்றச்செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் அந்த ஐவரையும் அவ்விடத்தில் ராமச்சந்திரன் உதவிக்கு அமர்த்தியதாகக் கூறப்பட்டது.

அந்த ஐவரும் ஆள்கடத்தல் சட்டம் 1961ன் மூன்றாவது பிரிவின்கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ள வேளையில், ராமச்சந்திரன் மீது இந்தக் குற்றச்சாட்டுடன், குற்றவியல் தண்டனைச் சட்டப் பிரிவு 109ன் கீழும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டு நிரூபணமானால் அவர்கள் அனைவருக்கும் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.

அவர்கள் அறுவருக்கும் பிணை மறுக்கப்பட்டது.

ராமச்சந்திரனை மட்டும் வழக்கறிஞர் R. சிவராஜ் பிரதிநிதித்தார். மற்றவர்களின் சார்பில் வழக்கறிஞர்கள் யாரும் பிரதிநிதிக்கவில்லை.

இந்த வழக்கு மீண்டும் ஆகஸ்ட் 27 அன்று விசாரணைக்கு வரும்.

ஆறுமுகத்தின் உடல் பட்டு 27க்கு அருகில் ஜாலான் ராவாங் பெஸ்டாரி ஜெயாவில் கண்டுபிடிக்கப்பட்டதாக சிலாங்கூர் குற்றவியல் விசாரணைத் துறை தலைமை மூத்த துணை ஆணையர் ஃபட்ஸில் அகமது ஜூன் 27 அன்று கூறினார்.

திரு ஆறுமுகம் கடத்தப்பட்டது பற்றிய புகார் ஜூன் 10ஆம் தேதி பெறப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். கடத்தல்காரர்கள் திரு ஆறுமுகத்தின் மகனைத் தொடர்புகொண்டு, பிணைத்தொகை கோரினர்.

திரு ஆறுமுகத்துக்கு பரிச்சயமான ஒருவர்தான் இந்தக் கடத்தல் சம்பவத்தின் மூளையாகச் செயல்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்ததாக திரு ஃபட்ஸில் குறிப்பிட்டார்.

திரு ஆறுமுகமும் அவரது கடத்தல் சம்பவத்தில் மூளையாகச் செயல்பட்டவரும் நண்பர்கள் என்றும் பல ஆண்டுகளாக வர்த்தகத் தொடர்பில் இருந்ததாகவும் விசாரணையில் தொடர்புடைய ஒருவர் தெரிவித்ததாகக் கூறப்பட்டது.

அண்மைக்காலமாக, பணம் தொடர்பான மனக்கசப்பு இவ்விருவருக்கும் இருந்ததாக தி நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி குறிப்பிட்டது.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon