மலேசியாவில் வழக்கறிஞர் கொல்லப்பட்ட வழக்கில் 6 பேருக்கு மரண தண்டனை

துணை அரசு தரப்பு வழக்கறிஞராக இருந்த திரு அந்தோனி கெவின் மொராயிஸ் 2015ஆம் ஆண்டு கொல்லப்பட்ட வழக்கில், மருத்துவர் ஆர். குணசேகரன், 55, உட்பட ஆறு பேருக்கு மரண தண்டனை விதித்து மலேசியாவின் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

R. தினேஷ்வரன், AK தினேஷ் குமார், M. விஸ்வநாத், S. நிமலன், கடன் வழங்கும் தொழில் புரியும் S. ரவி சந்திரன் ஆகியோர் மரண தண்டனை பெற்ற மற்ற ஐவர்.

2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காலை 7 மணிக்கும் இரவு 8 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் சுபாங் ஜெயாவில் திரு மொராயிசை கொலை செய்ததாக இந்த அறுவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

தற்காப்பு வழக்கறிஞர்கள் தங்களது கட்சிக்காரர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மீதான சந்தேகத்தை உரிய முறையில் நிரூபிக்கவில்லை என்று நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டது.

திரு அந்தோனி கெவின் மொராயிசின் அண்ணன் ரிச்சர்ட் மொராயிஸ் உட்பட அவர்களது குடும்பத்தார் இன்று நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர். நீதிபதி தீர்ப்பை வாசித்தபோது அவர்கள் உணர்ச்சி மேலிட்டவர்களாக இருந்தனர். தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்ட திரு ரிச்சர்ட், தங்கள் தரப்பு வழக்கறிஞர்கள் வியக்கத்தக்க வகையில் செயல்பட்டதாகத் தெரிவித்தார்.

“எனது தம்பியின் மரணத்துக்கு நியாயம் வேண்டி நீண்ட காலம் காத்திருந்தேன்,” என்றார் திரு ரிச்சர்ட்.

குற்றவாளிகளின் குடும்பத்தாரும் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர். தீர்ப்பைக் கேட்டதும் சிலர் கண்ணீர் சிந்தினர்.

தீர்ப்பை வாசித்தபோது குற்றவாளிகள் மௌனமாக இருந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் சங்கிலியில் பிணைக்கப்பட்டு நீதிமன்ற அறையிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டனர்.

2016ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கிய வழக்கு விசாரணையில் வாதியின் தரப்பில் 70 சாட்சிகளும் பிரதிவாதியின் தரப்பில் 14 சாட்சிகளும் விசாரிக்கப்பட்டனர்.

2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் தேதி தற்காப்பு வாதத்தைச் சமர்ப்பிக்க பிரதிவாதிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

2015ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி திரு அந்தோனி கெவின் மொராயிஸ் ஜாலான் டுட்டாமாஸ் ராயா சென்டுலில் பலரால் கடத்தப்பட்டு எண் 1 ஜாலான் USJ1/6D, சுபாங் ஜெயாவுக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அதற்கு அடுத்த நாள் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை என திரு ரிச்சர்ட் போலிசில் புகார் அளித்தார்.

பல நாட்களுக்குப் பிறகு திரு அந்தோனி கெவின் மொராயிசின் கார் பாதி எரிந்த நிலையில் பேராக்கில் உள்ள தோட்டம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது.

குற்றவாளி என சந்தேகிக்கப்பட்ட எழுவரில் ஒருவர் அளித்த தகவலின்படி, சுபாங் ஜெயாவில் 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி திரு மொராயிசின் உடல் சிமென்ட் நிரப்பப்பட்ட டிரம் ஒன்றுக்குள் கண்டுபிடிக்கப்பட்டது.


அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!