‘துன், பிரதமர் பதவியிலிருந்து நீங்கள் ஓடிப்போய் விட்டீர்கள்’

கோலாலம்பூர்: மலேசிய நாடாளுமன்றம் நேற்று பரப்பரப்பான சூழ்நிலையில் கூடியது.

முதல் காரியமாக சபாநாயகரை மாற்றும் தீர்மானத்தை ஆளும் கட்சி உறுப்பினர்கள் கொண்டு வந்தனர்.

இதனால் உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தீர்மானத்தை எதிர்த்துப் பேசிய முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர், தற்போதைய சபாநாயகர் முஹமது அரிஃபை மாற்ற வேண்டிய காரணத்தை தேசிய கூட்டணி விளக்கவில்லை,” என்றார். இதற்கு தேசிய முன்னணியைச் சேர்ந்த உறுப்பினர்கள் பதிலளித்தனர்.

கடந்த பிப்ரவரி மாதம் அரசியல் நெருக்கடி ஏற்பட்டபோது பிரதமர் மகாதீரே பதவியில் நீடிக்க வேண்டும் என்று தாங்கள் விரும்பியதாக தேசிய முன்னணியைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.

பாஸ் கட்சியும் சரவாக்கின் கபுங்கான் கட்சியும் இதற்கு ஆதரவாக இருந்ததாகவும் அவர்கள் கூறினர்.

அம்னோவின் அராவ் தொகுதி உறுப்பினரான ஷஹிடான் காசிம், பிரதமர் பதவியிலிருந்து விலகுவதில் டாக்டர் மகாதீர் உறுதியாக இருந்தார்,” என்றார்.

இதனால் தேசிய முன்னணி, பாஸ், கபுங்கான் ஆகியவற்றைச் சேர்ந்த எம்பிக்களுக்கு வேறு ஒருவரை பிரதமர் பதவிக்கு முன்மொழிவதைத் தவிர வேறு வழியில்லாமல் போய்விட்டது என்றார் அவர்.

“இவை எல்லாமே உங்களால்தான் நடந்தது, துன், நீங்கள் (டாக்டர் மகாதீர்) பதவி விலகியதால்தான் இது நடந்தது. இப்போது சபாநாயகரையும் மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. துன், தேசிய முன்னணியைச் சேர்ந்த நாங்களும் பாஸ் மற்றும் கபுங்கான் கட்சியினரும் நீங்கள் பிரதமராக இருக்க ஆதரவு தெரிவித்தோம். ஆனால், நீங்கள் பதவியிலிருந்து விலகிவிட்டீர்கள்,” என்று அவர் கூறினார்.

அப்போது பாலிங் நாடாளுமன்ற உறுப்பினரான அப்துல் அஸிஸ் ரஹீம், நீங்கள் ஓடிப்போய் விட்டீர்கள்,” என்று கத்தினார்.

மேலும் தொடர்ந்து பேசிய ஷஹிடான் காசிம், “நீங்கள் பதவி விலகியதால் மற்றொருவரை பிரதமர் பதவிக்கு பெயர் குறிப்பிட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. நீங்கள் பதவியிலிருந்து விலகியிருக்கக்கூடாது, இல்லையென்றால் போர்ட் டிக்சன் உறுப்பினரை (அன்வார் இப்ராஹிம்) பிரதமர் பதவிக்கு முன்மொழிந்திருக்க வேண்டும். ஆனால் நீங்கள் அதையும் செய்யாமல் பதவி விலகியதால் திரு முகைதீன் யாசினை பிரதமர் பதவிக்கு முன்மொழிய வேண்டியிருந்தது. பிரதமர் பதவியிலேயே மாற்றம் ஏற்பட்டுள்ளதால் மற்ற பதவிகளுக்கும் மாற்றம் ஏற்பட வேண்டும்,” என்று வலியுறுத்தினார்.

அம்னோவை சேர்ந்த மற்றொரு உறுப்பினரான புங் முக்தார், ஷஹிடானின் கருத்தை வரவேற்றார். தேசிய முன்னணி, பாஸ், கபுங்கான் ஆகியவற்றின் எம்பிக்கள் மகாதீரின் பதவி விலகலை விருப்பமில்லாமல் ஏற்றுக் கொண்டதாக அவர் கூறினார்.

“அராவ் உறுப்பினர் கூறியதே உண்மை, உங்களால்தான் எல்லாமே நடந்தது, மாமன்னரும் பதவியிலிருந்து விலக வேண்டாம் என்று உங்களை அறிவுறுத்தியிருந்தார். ஆனால் அதையும் மீறி பதவியை நீங்கள் துறந்து விட்டீர்கள். இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய ேவண்டிய நிலை ஏற்பட்டது,” என்று திரு புங் முக்தார் தெரிவித்தார்.