மலேசியா: இன்று முதல் பொது இடங்களில் முகக்கவசம் அவசியம்

மலேசியாவில் பொது இடங்களில் முகக்கவசம் இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தொற்றுநோய்கள் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு சட்டத்தின்கீழ், புதிய விதிமுறைகளின்படி முகக்கவசம் அணியாதவர்களுக்கு 1,000 ரிங்கிட் S$324) வரை அபராதம் விதிக்கப்படலாம்.

கொவிட்-19 பரவலைக்  கட்டுப்படுத்துவதற்காக சிங்கப்பூர், ஹாங்காங், வியட்னாம், ஆஸ்திரேலியாவின் விக்டோரியா போன்ற இடங்களில் பொது இடங்களில் முகக்கவசம் ஏற்கெனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் கிருமித்தொற்று உச்சத்தில் இருந்த மார்ச் மாதத்தில் தொற்று அறிகுறி இருப்பவர்களும் முன்கள சுகாதாரப் பராமரிப்பாளர்களும் முகக்கவசம் அணியுமாறு கோரப்பட்டனர்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை தளர்த்தப்பட்ட பிறகு கொவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கூட்டமான பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும் என மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கடந்த மாதம் 23ஆம் தேதி அறிவித்தார்.

படிப்படியாக, வீட்டை விட்டு வெளியில் வருவோர் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற சூழல் நீண்ட காலப்போக்கில் நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

முகக்கவசம் அணிவதன் மூலம் கிருமிப் பரவல் வெகுவாகக் குறையும் என்றும் இரண்டாம் அலையைத் தவிர்க்க முடியும் என்றும் மலேசிய மருத்துவ கூட்டமைப்புச் சங்கத் தலைவர் மருத்துவர் ராஜ் குமார் மகாராஜா தெரிவித்தார்.