உயர் கல்வி: சிங்கப்பூருக்கு நடந்தே வரவேண்டிய சூழலில் மலேசிய மாணவர்கள்

சிங்கப்பூர் பல்கலைக்கழகங்கள் இந்த மாதம் புதிய கல்விப் பருவத்தை தொடங்குகின்றன.

அதனை அடுத்து இங்குள்ள பல்கலைக்கழங்களில் படிக்கும் மலேசிய மாணவர்கள்  நடந்தே கடற்பாலத்தைக் கடந்து வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெரும்பாலான வகுப்புகள் இணையம் வழி நடக்கும்.

அதிகபட்சமாக 50 மாணவர்கள் வரை கலந்துகொள்ளும் வகுப்புகளை நடத்த அனுமதிக்கப்படும்.

எல்லை கடந்து வருவோர் 14 நாட்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய தேவை இருக்கும் என gov.sg என்ற சிங்கப்பூர் அரசாங்க இணையத்தளம் தெரிவிக்கிறது.  

கொவிட்-19 காரணமாக  டிரக் வாகனத்தைத் தவிர வேறு எந்த வாகனமும் மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு கடற்பாலத்தைக் கடந்து செல்ல முடியாது.

ஆகையால், உடைமைகளைச் சுமந்தபடி 1 கி.மீ.  நடந்து கடற்பாலத்தைக் கடந்து வரவேண்டி இருக்கும் என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் படிக்கும் மலேசியாவின் இவான் சோங் என்ற மாணவர் ஜோகூர் பாருவில் தெரிவித்தார். 

இவர் இரண்டு வார காலம் தனிமையில் இருக்க தேவைப்படும் $1,500 தொகையை ஏற்கெனவே செலுத்தி இருக்கிறார். இதே பல்கலைக்கழகத்தில் படிக்கும் இயூஜின் சோங் என்ற மாணவரும் இப்படியே கூறினார்.

இருந்தாலும் இங்கு படிக்கும் மலேசிய மாணவர்களில் பலர் இப்போதைக்கு மலேசியாவிலேயே தங்கி இருந்து பிறகு படிப்பைத் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள் என்று தெரிகிறது.