அன்வார்: புதிய அரசாங்கம் அமைக்க வலுவான ஆதரவு எனக்கு உள்ளது

மலேசியாவில் புதிய அரசாங்கம் அமைப்பதற்குத் தம்மிடம் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் வலுவான ஆதரவு உள்ளதென திரு அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.

மேலும் பிரதமர் முகைதீன் யாசினின் கீழ் இயங்கி வரும் அரசாங்கம் கவிழ்ந்துவிட்டதாகவும் அவர் இன்று கோலாலம்பூர் ஹோட்டல் ஒன்றில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

மலேசியாவின் 222 நாடாளுமன்ற உறுப்பினர்களில் குறைந்தது 112 பேர் அவருக்கு ஆதரவாக இருந்தால், ஆட்சி அமைக்க அது போதுமானதாக இருக்கும்.

இதற்குமுன் இவர் தலைவராக இருக்கும் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணிக் கட்சியில் 91 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அவரது கெஅடிலான் கட்சியில் 38, டிஏபி கட்சியில் 42 மற்றும் அமானா நெகாரா கட்சியில் 11 பேரும் இதில் அடங்குவர். தற்போது தம்முடன் உள்ள எம்.பி.க்களில் ஆளும் பிஎன் கூட்டணிக் கட்சியில் உள்ளோரும் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

“எங்களுக்கு வலுவான, நம்பகமான, வல்லமைமிக்க பெரும்பான்மை ஆதரவு உள்ளது. இந்த நாட்டை ஆளவும் காப்பாற்றவும் ஓர் உறுதியான, நிலையான அரசாங்கம் நமக்குத் தேவை.

“இதுபோன்ற தெளிவான, மறுக்க முடியாத ஆதரவு எனக்குப் பின்னால் இருப்பதால் திரு முகைதீன் யாசினின் அரசாங்கம் கவிழ்ந்துவிட்டது,” என்றார் அவர்.

மலேசிய மாமன்னரைச் சந்தித்த பின்னரே தமக்கு ஆதரவாக உள்ள எம்.பி.க்களின் எண்ணிக்கையைத் தம்மால் அறிவிக்க முடியும் என்றும் அவர் சொன்னார்.

தாம் அமைக்கவுள்ள புதிய அரசாங்கத்தில் டாக்டர் மகாதீரும் அவரின் ஐந்து எம்.பி.க்களும் இடம்பெறவில்லை என்று திரு அன்வார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

திரு அன்வாரின் பெரும்பான்மை ஆதரவு தொடர்பில் பின்னர் டாக்டர் மகாதீர் கருத்து கூறினார். செப்டம்பர் 2008ல் அப்துல்லா படாவி பிரதமராக இருந்த சமயத்தில் இதேபோன்ற கூற்றை அன்வார் முன்வைத்தார் என்றும் நாடாளுமன்றத்தில் பின்னர் அவரால் போதுமான எம்.பி.க்களை தமக்கு ஆதரவாகத் திரட்ட முடியவில்லை என்றும் அவர் நினைவுகூர்ந்தார்.

இதற்கிடையே புதிய கொவிட்-19 உதவித் திட்டம் குறித்து நேற்று பிற்பகல் பிரதமர் முகைதீன் பேசினார். பொருளியலை மீட்க மலேசியர்களின் ஆதரவுடன் ஒரு நிலையான, வலுவான அரசாங்கம் வேண்டும் என்ற சொற்களுடன் தம் 40 நிமிட உரையை முடித்தார்.

மேலும், தற்போதும் தாம் தான் பிரதமர் என்று குறிப்பிட்டுள்ள திரு முகைதீன், அரசு நிலைத்தன்மையுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!