மருத்துவமனையில் மாமன்னர்; அன்வாருக்கு நெருக்கடி

மலேசியாவில் அரசியல் குழப்பங்களும் அதிகாரப் போராட்டங்களும் அதிகரித்து வரும்வேளையில் அந்நாட்டு மாமன்னர் சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் மருத்துவமனைக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். இதனால், அடுத்த ஒரு வார காலம் அவர் எவரையும் சந்திக்கமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் புதிய அரசாங்கத்தை அமைப்பது குறித்து வரும் செவ்வாய்க்கிழமை மன்னரைச் சந்திக்க உள்ளதாக குறிப்பிட்டிருந்தநிலையில் இச்செய்தி வெளியாகியுள்ளது.

அந்நாட்டில் மாமன்னர் பதவி சடங்குபூர்வமானது என்றபோதிலும், பிரதமரை நியமித்து, அவர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட அவருக்கு அதிகாரம் உண்டு. அதேபோல், பிரதமரின் ஆலோசனையுடன் நாடாளுமன்றத்தைக் கலைத்து, தேர்தலை அறிவிக்கவும் அவருக்கு அதிகாரம் உண்டு.

பிரதமர் முஹைதீன் யாசினைப் பதவியிலிருந்து நீக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களின் “வலுவான, உறுதியான” ஆதரவு தமக்கு இருப்பதாக அன்வார் நேற்று முன்தினம் கூறியிருந்தார். ஆனால், அதை அவர் மாமன்னரிடம் நிரூபிக்க வேண்டும்.

மிகக் குறைந்த பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் பிரதமர் முகைதீன் யாசின் அன்வாரின் இக்கூற்றை நிராகரித்துள்ளார். அத்துடன் அப்பெரும்பான்மையை நிரூபிக்கும்படி அவர் சவால் விடுத்துள்ளார். அரசியல் அதிரடி நிகழ்வுகளைத் தொடர்ந்து ஏழு மாதங்களுக்கு முன்னர் முகைதீன் பிரதமராகப் பொறுப்பேற்றார்.

இந்நிலையில், தாம் இன்னும் பிரதமராக இருப்பதாகவும், மாமன்னர் தம்மை அரண்மனைக்கு அழைக்கவில்லை என்றும் கூறியுள்ள முகைதீன், தற்போது அதுபற்றி தாம் கவலைப்படத் தேவையில்லை என்றார்.

இதற்கிடையே, அம்னோ கட்சி உறுப்பினர்கள் அன்வாருக்கு ஆதரவு அளித்திருப்பதாகக் கூறப்படுவது குறித்து பாஸ் கட்சி விளக்கம் கேட்டுள்ளது.

அதேநேரத்தில், அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிகேஆர் தலைவர் அன்வாருக்கு ஆதரவு அளிப்பதாக கூறப்படுவது பற்றி அம்னோ தலைவர் அமகது சாஹிட் ஹமிடியிடம் தனது கட்சி விளக்கம் கேட்கப்போவதில்லை என்று பெர்சத்து பொதுச் செயலாளர் ஹம்சா சைனுடின் கூறியுள்ளார்.

சாஹிட் ஹமிடியின் இக்கருத்து அவரது சொந்த கருத்து என்ற அஸ்மின் அலி, முன்னதாக, அம்னோ, தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்வாரை ஆதரிப்பதை தம்மால் கட்டுப்படுத்த முடியாது என்று குறிப்பிடிருந்தார்.

இதற்கிடையில், பல தேசிய கூட்டணி மற்றும் பெர்சத்து தலைவர்கள் தாங்கள் இன்னமும் முஹைதீன் யாசின் தலைமைக்கு ஆதரவாக இருப்பதாக கூறியுள்ளனர்.

பெரும்பான்மை ஆதரவு இருப்பதாகக் கூறிய அன்வார், தமக்கு ஆதரவாக இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை வெளியிட மறுத்துவிட்டார்.

இத்தகைய சூழலில் ஆட்சி மாற்றம் வருவது, ஏற்கெனவே கொவிட்-19 கிருமிப் பரவலால் மோசமடைந்துள்ள பொருளியலை மேலும் பாதிக்கும் என அரசியல் கவனிப்பாளர்கள் கருத்துரைத்துள்ளனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!