மலேசியா: மாமன்னர் எடுக்கும் முடிவுக்காக காத்திருக்கும் அன்வார்

மலேசியாவின் அடுத்த பிரதமராகப் போதிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தமக்கு இருப்பதாகக் கூறி வந்த எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம், இன்று (அக்டோபர் 13) காலையில் மாமன்னரைச் சந்தித்தபோது அதற்கான ஆவணங்களை ஒப்படைத்தார்.

அவர் அளித்த சான்றுகளின் அடிப்படையில் அடுத்து வரும் நாள்களில் மாமன்னர் முடிவெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தம் 222 எம்.பி.க்களைக் கொண்ட மலேசிய நாடாளுமன்றத்தில் தமக்கு 120க்கு மேற்பட்ட உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது என்றும் அதனால் நாடாளுமன்றக் கீழவையில் பெரும்பான்மையை இழந்துவிட்ட பிரதமர் முகைதீன் யாசின் பதவி விலகுவதுதான் பொருத்தமாக இருக்கும் என்றும் எதிர்த்தரப்பு ‘பிகேஆர்’ கூட்டணியின் தலைவரான திரு அன்வார் தெரிவித்துள்ளார்.

“நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையே எங்களுக்கு அறுதிப் பெரும்பான்மை இருப்பதைப் பதிவுசெய்துள்ளோம்,” என்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது திரு அன்வார் கூறினார்.

மாமன்னர்-அன்வார் சந்திப்பின் தொடர்பில் அரண்மனையில் இருந்து வெளியான அறிக்கையில், சந்திப்பு 25 நிமிடங்களுக்கு நீடித்ததாகவும், தமக்கு மொத்தம் எத்தனை எம்.பி.க்களின் ஆதரவு உள்ளது என்பதற்கான சான்றை திரு அன்வார் வழங்கியதாகவும் அவ்வறிக்கை குறிப்பிட்டது.

ஆனால், ஆதரவு அளிக்கும் எம்.பி.க்களின் பெயர் விவரங்களை திரு அன்வார் சமர்ப்பிக்கவில்லை என்றது அவ்வறிக்கை.

மாமன்னரின் சார்பாக, அரண்மனையின் தலைமைக் கணக்கு அதிகாரி அகமது ஃபாடில் ஷம்சுதீன் அந்த அறிக்கையை வெளியிட்டார்.

இவ்விவகாரம் தொடர்பில், கூட்டரசு அரசியலமைப்பில் இடம்பெற்றுள்ள சட்ட நடைமுறைகளை மதித்து, இணங்கி நடக்குமாறு மாமன்னர் அப்துல்லா ரியாத்துதீன் திரு அன்வாருக்கு அறிவுரை வழங்கியதாகச் சொல்லப்படுகிறது.

இதற்கிடையே, அம்னோ கட்சியின் ஆலோசனை மன்றத் தலைவர் ரஸாலி ஹம்ஸா இன்று பிற்பகலில் மாமன்னரைச் சந்தித்தார்.

ஜனநாயகச் செயல் கட்சியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், மலேசிய இந்தியர் காங்கிரஸ் தலைவர் எஸ்.ஏ.விக்னேஸ்வரன் ஆகியோருக்கும் அரண்மனையில் இருந்து அழைப்பு வந்து இருப்பதாக ‘மலேசியாகினி’ செய்தித்தளம் தெரிவித்துள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!