சுடச் சுடச் செய்திகள்

மலேசியாவில் கையுறை தயாரிக்கும் நிறுவனம், ஊழியர்கள் தங்குமிடத்தில் சுகாதாரக் குறைபாடு; மனிதவள அமைச்சு விசாரணை

மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கு அருகே மெரு எனும் பகுதியில், ‘டாப் கிளவ்’ கையுறை தயாரிப்பு நிறுவனத்தின் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களின் தங்குமிடம் மிகவும் மோசமான நிலையில் இருப்பது கண்டறியப்பட்டிருப்பதாக மனிதவள அமைச்சர் எம். சரவணன் கூறியுள்ளார்.

ஊழியர்கள் பணிபுரியும் தொழிற்சாலையிலும் சுகாதார நிலவரம் மோசமாக இருப்பது தெரியவந்துள்ளது.

அதன் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு ஒரு வாரத்திற்குள் பிரச்சினை சரிசெய்யப்படும் என அவர் உறுதியளித்து உள்ளார்.

நெரிசலாகவும் சுகாதாரமற்ற முறையிலும் உள்ள ஊழியர்களின் அந்த தங்குமிடப் பிரச்சினைக்கு உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், அங்கு கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்துவது சிரமமாகி விடும் என அவர் சொன்னார்.

“ஊழியர்களின் தங்குமிடம் சுகாதாரமான முறையில் இருப்பதை உறுதிசெய்வது முதலாளிகளின் கடமையாகும். அதைச் செய்யத் தவறும் தரப்பின் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதை தொழிலாளர் துறை உறுதி செய்யும்,” என அமைச்சர் சரவணன் எச்சரித்தார்.

சில தினங்களுக்கு முன்பு, தொழிலாளர் துறை அதிகாரிகளுடன் இணைந்து அமைச்சர் சரவணன் ‘டாப் கிளவ்’ நிறுவன ஊழியர்களின் தங்குமிடத்தைப் பார்வையிட சென்றிருந்தார்.

சுகாதாரமற்ற நிலையில் இருந்த அந்த தங்குமிடத்தின் புகைப்படங்களையும் காணொளியையும் அவர் ஊடகங்களிடம் பகிர்ந்தார்.

இதற்கு முன்பு, ஊழியர்களின் தங்குமிடத்தை ஒரு காரணமாக சுட்டிக் காட்டி, அமெரிக்காவின் சுங்க எல்லை பாதுகாப்பு அமலாக்க நிறுவனம், உலகின் ஆகப் பெரிய கையுறை உற்பத்தி நிறுவனமான ‘டாப் கிளவ்’வின் ஏற்றுமதிக்குத் தடை விதித்திருந்தது.

சிலாங்கூர் மாநிலத்தில் நேற்று  1,623 கொவிட்-19 சம்பவங்கள் பதிவாகின. அவற்றில், ‘டாப் கிளவ்’ நிறுவனத்தின் தொழிற்சாலை மற்றும் தங்குமிடப் பகுதியைச் சுற்றியுள்ள கிருமித்தொற்றுக் குழுமத்தில் மட்டும் 1,511 கொவிட்-19 சம்பவங்கள் பதிவாகின. இந்த எண்ணிக்கை, சிலாங்கூரில் நேற்று பதிவான மொத்த கொவிட்-19 சம்பவங்களில் 93.1 விழுக்காடாகும்.

இம்மாதம் 7ஆம் தேதியிலிருந்து அந்தக் கிருமித்தொற்றுக் குழுமத்தில் மொத்தம் 4,036 கொவிட்-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கிருமி தொற்றியோரில் 80 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் வெளிநாட்டு ஊழியர்கள்.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon