மலேசியாவில் மோசமடைந்து வரும் கொவிட்-19 நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த வெளிநாட்டு ஊழியர்களைத் தற்காலிகமாக ஹோட்டலில் தங்கவைக்கும் தேசிய அளவிலான திட்டம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. ஊழியர் தங்குவிடுதிகள் சம்பந்தப்பட்ட வேலையிடங்களில் நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுற்றுப்பயண, கலைகள், கலாசாரத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
நோய்ப் பரவல் சூழலால் வருமானம் இழந்து தவிக்கும் ஹோட்டல் துறைக்கு இந்த ஏற்பாடு புத்துயிரூட்டும் எனத் தான் நம்புவதாக அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் கூறியது.
ஊழியர் ஒருவரை ஹோட்டல் அறையில் தங்கவைப்பதற்கான மாதக் கட்டணம் 200 ரிங்கிட்டாக (S$65.54) இருக்கும் என்று அமைச்சு தகவல் தெரிவித்தது. அதுபோக மின்சாரம், தண்ணீர் வசதிக்கான மாதக் கட்டணம் 20 ரிங்கிட்டாக இருக்கும்.
சலவை வசதி, உணவு போன்ற இதர வசதிகளுக்கான செலவை ஊழியரோ முதலாளியோ ஏற்க வேண்டும் என்று அமைச்சு சொன்னது.தீபகற்ப மலேசியத் தொழிலாளர் துறையுடன் சேர்ந்து அமைச்சு இந்த முயற்சியை முன்னெடுக்கிறது. கடந்த மாதம் 26ஆம் தேதி நடந்த தேசிய பாதுகாப்பு மன்ற சிறப்புக் கூட்டத்தின்போது இதுகுறித்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சு கூறியது. அதைத் தொடர்ந்து, இந்தப் பரிந்துரைகள் குறித்து கருத்துகளைக் கேட்டறிய இம்மாதம் 4ஆம் தேதி ஹோட்டல், சுற்றுப்பயணப் பேருந்துத் துறை பிரதிநிதிகளுடன் தான் பேச்சுவார்த்தை நடத்தியதாக அமைச்சு குறிப்பிட்டது.
மலேசியாவின் வேலையிடங்களில் அண்மையில் கிருமித்தொற்றுக் குழுமங்கள் அதிகரித்து இருப்பது குறித்து சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா கவலை தெரிவித்து இருந்தார்.
கடந்த மாதம் 6 முதல் 22ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் பதிவான 350 கிருமித்தொற்றுக் குழுமங்களில் 64.3 விழுக்காடு வேலையிடங்களுடன் தொடர்பானவை என்றார் அவர்.முன்னதாக, வெளிநாட்டு ஊழியர்களுக்கான கட்டாய கொவிட்-19 பரிசோதனைத் திட்டம் நாடளவில் விரிவுபடுத்தப்பட இருப்பதாக மலேசிய மனிதவள அமைச்சர் எம்.சரவணன் அறிவித்து இருந்தார்.
மலேசியாவில் பணியாற்றும் ஏறத்தாழ 800,000 வெளிநாட்டு ஊழியர்கள் இத்திட்டத்தில் உட்படுத்தப்படுவர் என்று அவர் கூறி இருந்தார். மலேசியாவில் ஏறக்குறைய இரண்டு மில்லியன் வெளிநாட்டு ஊழியர்கள் சட்ட ரீதியாக பணியாற்றுகின்றனர்.