கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களை சிங்கப்பூர் செல்ல அனுமதிக்கும்படி ஜோகூர் மாநில அரசாங்கம், மலேசிய அரசைக் கேட்டுக்கொள்ள இருக்கிறது.
தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்குச் சான்றிதழ் வழங்கப்படும் என்று ஜோகூர் முதல்வர் ஹஸ்னி முகம்மது இன்று (மார்ச் 1) தெரிவித்தார்.
“தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான பலன், புதிய இயல்புநிலையில் கிடைப்பதை உறுதிசெய்ய ஜோகூர் அரசு தன்னாலான அனைத்தையும் செய்யும். தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கு அதற்கான சான்றிதழ் கிடைத்தபின், இந்தப் புதிய இயல்புநிலையின்போது எல்லை தாண்டிய பயணம் தொடர்பில் அவர்களுக்குச் சில பலன்கள் அளிக்கப்பட வேண்டும்,” என்று திரு ஹஸ்னி கூறினார்.
சிங்கப்பூருடனான எல்லையை மீண்டும் திறப்பது தொடர்பிலான நிலையான வழிகாட்டி நெறிமுறைகள் குறித்து ஜோகூர் அரசாங்கம் தனது யோசனைகளையும் பரிந்துரைகளையும் மலேசிய அரசிடம் தெரிவிக்கும் என்றும் அவர் சொன்னார்.
தேசிய அளவிலான கொவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின்கீழ் இன்று ஃபைசர் - பயோஎன்டெக் நிறுவனத்தின் முதல் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளுமுன் திரு ஹஸ்னி செய்தியாளர்களிடம் இவ்வாறு பேசினார்.
முன்னதாக, தடுப்பூசி போட்டுக்கொண்டோர் மலேசியா-சிங்கப்பூர் இடையே பயணம் செய்ய ஏதுவாக ‘தடுப்பூசிக் கடப்பிதழை’ பயன்படுத்த ஜோகூர் அரசாங்கம் பரிந்துரைக்குமா என அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த முதல்வர் ஹஸ்னி, தேசிய கொவிட்-19 தடுப்பூசித் திட்டம் நிறைவடைந்தபின் சிங்கப்பூர் உடனான எல்லையைத் திறப்பது குறித்தும் இருவழிப் பயண ஏற்பாடு குறித்தும் பரிசீலிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.