மலேசியாவில் தடுப்பூசி போட்டவர்களும் கொவிட்-19 கிருமிப்பரவலால் கடுமையாக பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்த சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின், பூஸ்டர் எனப்படும் மேம்பட்ட தடுப்பூசிகளைப் போடும்படி மக்களைக் கேட்டுக்கொண்டார்.
சில மாதங்களுக்குப் பிறகு தடுப்பூசிகளின் சக்தி குறையும் எனத் திரு கைரி தெரிவித்தார். “குறிப்பாக சைனோவேக் தடுப்பூசி, தனது சக்தியை விரைவாக இழக்கிறது. இதனால்தான் பூஸ்டர் தடுப்பூசியைப் பயன்படுத்தும்படி நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என்று அவர் சொன்னார்.
சிலாங்கூரில் கொவிட்-19 தொடர்பில் நோயாளிகள் பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதைக் காட்டும் தரவுகளை திரு கைரி தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்தார். பாதிக்கப்பட்ட நோயாளிகளில் பெரும்பாலானோர் சைனோவெக் தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டவர்கள்.
இன்று ஞாயிற்றுக்கிழமை மலேசியாவில் புதிதாக 4,854 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ள நேரத்தில் திரு கைரியின் எச்சரிக்கை வெளிவந்துள்ளது. இதனுடன் அந்நாட்டின் மொத்த கிருமித்தொற்று எண்ணிக்கையில் 2,586,601 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குர்நர் நுர் ஹிஷாம் தெரிவித்தார். அத்துடன் இன்று 41 பேர் இறந்திருப்பதாக மலேசிய சுகாதார அமைச்சு தெரிவித்தது.