குடியிருப்புப் பேட்டைகளிலும் அக்கம் பக்கத்திலும் பிள்ளைகள் ஒன்றுகூடி விளையாடுவதை நாம் காண்பதுண்டு. குறிப்பாக, வீடமைப்புக் கட்டடத்தின் கீழ்த்தளத்திலும் விளையாட்டு மைதானங்களிலும் ஓடியாடி அவர்கள் மகிழ்வது வழக்கம்.
இன்றைய நோய்ப்பரவல் சூழல் அத்தகைய விளையாட்டுகளுக்குத் தடையாக அமைந்துவிட்டது. கொரோனா கிருமிப் பரவலை முறியடிப்பதற்கான அரசாங்கத்தின் அதிரடித் திட்டத்தால் பிள்ளைகள் உட்பட பலரும் வீட்டிலேயே இருக்கவேண்டியிருந்தது. வீட்டில் பொழுதை எங்ஙனம் கழிக்கலாம் என்று பலரும் ஆராய்ந்தனர். பலரும் நூதனமாக வழிகளைக் கண்டறிந்தனர்.
ஆறு வயது அலெக்சிஸ் வாமன் வினோத்தும் மூன்று வயது அலெனா ரிஷிகா வினோத்தும் வீட்டல் இருந்தபடியே உடற்பயிற்சியில் ஈடுபட்டனர். அவர்களின் தாயார், 33 வயது நிரம்பிய ரேச்சல் மெக்டெலின் என்பவர் இணையத்தின் வழியே பிறருக்கு உடற்பயிற்சி கற்றுக்கொடுப்பது, சிறப்புத்தேவைகள் கொண்ட பிள்ளைகளுக்குக் கற்பிப்பது என ஆசிரியராகப் பணியாற்றுகிறார். அவரே தம்முடைய பிள்ளைகளுக்கும் உடற்பயிற்சிகளைக் கற்றுத் தந்தார்.
"உடற்பயிற்சியில் ஈடுபடுவது உடலுக்கு மட்டுமன்றி மனத்திற்கும் நல்லது. அதே நேரத்தில் குடும்பத்தினர் ஒன்றாக உடற்பயிற்சியில் ஈடுபடுவது ஒருவருக்கொருவர் ஊக்கமளிப்பதுபோல் அமைகிறது. மேலும் இளமையிலேயே தொடங்கும் நல்ல பழக்கங்கள் முதுமை வரை தொடரும்," என்றார் திருமதி ரேச்சல்.
உடலை அங்குமிங்கும் அசைப்பதாலும், யோகாசனம், 'மியூசிக்கல் சேர்ஸ்', 'மிஸ்டர் உல்ஃப்', 'டான்ஸ் அன்ட் ஃப்ரீஸ்' முதலான விளையாட்டுகளில் ஈடுபடுவதாலும் பிள்ளைகள் உற்சாகம் பெறுகின்றனர். "அம்மா, அப்பாவுடன் யோகாசனம் செய்வேன். எனக்கு உடற்பயிற்சி மிகவும் பிடிக்கும்," என்று மூன்று வயது அலெனா கொஞ்சும் மழலை வார்த்தைகளில் தெரிவித்தார்.
திருமதி ரேச்சலைப் போலவே திருமதி காமினியும் அவருடைய இரண்டு பிள்ளைகளுடன் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்து வருகிறார். 'ஸூம்' போன்ற நிகழ்தளங்களில் நடத்தப்படும் வகுப்புகளின்வழி 'ஸூம்பா', யோகாசனம் முதலான பயிற்சிகளை வாரத்திற்குக் குறைந்தது மூன்று நாள்கள் தன் பிள்ளைகளுடன் ஈடுபடுவதாய் உற்சாகத்தோடு குறிப்பிட்டார் திருமதி காமினி.
தமது நடவடிக்கைகளைத் தம் மூத்த மகள் இரண்டு வயது ரியா அக்ஷரா பின்பற்றுவதாகக் குறிப்பிட்டவர், ''பெற்றோர்கள் அனைவரும் தங்கள் பிள்ளைகளுக்காக இயன்றவரை உடற்கட்டுடன் இருக்கவேண்டும்,'' என வலியுறுத்தினார்.
"என் பிள்ளைகள் இவற்றை உடற்பயிற்சியாகவே நினைக்கவில்லை. இவற்றை விளையாட்டாக நினைப்பதால் மகிழ்ச்சியுடன் இந்த உடற்பயிற்சியில் ஈடுபடுகின்றனர்," என்றார் திருமதி காமினி. உடற்பயிற்சி மட்டுமன்றி நல்ல உணவு பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவதும் முக்கியம் எனக் கூறும் திருமதி காமினி, இதற்காகக் கவனமாகத் திட்டமிடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

