வெற்றிமாறன் இயக்கத்தில் அண்மையில் வெளிவந்த 'விசாரணை' திரைப்படம் தமிழகத்தில் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. அந்தப் படம் பல அனைத்துலக விருதுகளைக் குவித்துக் கோலிவுட்டுக்குப் பெருமை சேர்த்த நிலையில் அந்தப் படத்தில் நடித்த நான்கு நண்பர்களுக்கும் நல்ல பெயர் கிடைத்திருக்கிறது. படத்தில் நடித்திருந்த 'ஆடுகளம்' முருகதாஸ் படத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை 'விசாரணை' என்ற பெயரில் காவல் துறையினரால் துன்புறுத்தப்படுவதாக காட்சிகள் அமைந்திருந்தன. அதில் இவருடைய நடிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.
ஆனால், இந்தப் படத்திற்குத் தனது மனைவியை அழைத்துச் செல்ல மறுத்துவிட்டாராம் முருகதாஸ். திரையில் காவல்துறையினர் தன்னைக் கொடுமையாக அடித்துத் துன்புறுத்துவதைத் தனது மனைவி பார்த்தால் திரையரங்கத்திலேயே அழுதுவிடுவார் என்பதால் அவரை அந்தப் படத்திற்கு அழைத்துச் செல்லவில்லை என அண்மையில் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். 'விசாரணை' வெற்றிக்குப் பின்னர் கோலிவுட்டில் நகைச்சுவை வேடங்கள் மட்டுமின்றி குணசித்திர வேடங்களில் நடிக்கவும் பல வாய்ப்புகள் தன்னைத் தேடி வருவதாக மகிழ்ச்சியுடன் கூறுகிறார் 'ஆடுகளம்' முருகதாஸ்.