சென்னை: அடுத்து திமுக ஆட்சி அமையும் பட்சத்தில் 80 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிப் பதற்கான திட்டம் நிறைவேற்றப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட உள்ளது. மேலும், குளிர்பதனப் பெட்டி, சலவை இயந்திரம் ஆகியவை இலவசமாக அளிக்கப்படும் என அறிவிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட் டணி குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்துவதுடன், தேர்தல் அறிக்கை தயாரிப்பதிலும் தமிழக அரசியல் கட்சிகள் மும்முரமாக உள்ளன. திமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கென தனிக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதில் மாநிலங்களவை உறுப் பினர் கனிமொழி உள்ளிட்ட பலர் இடம்பெற்றுள்ளனர்.
கடந்த இரு மாதங்களாக இக்குழு அறிக்கை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், தேர்தல் அறிக்கை முழுமை பெற்றுவிட்ட தாகவும் அதை வெளியிட திமுக தலைமை தகுந்த நேரம் பார்த்து வருவதாகவும் கூறப்படுகிறது. கடந்த திமுக ஆட்சியில் வீட்டிற்கு ஒரு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கப் பட்டது. அதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பும் கிடைத்தது. அதேபோல் மக்களைக் கவர்ந் திழுக்கும் வகையில் இம்முறையும் இலவசப் பொருட்களை வழங்கு வதாக திமுக வாக்குறுதி அளிக்க உள்ளது. அந்த வகையில் குளிர்பதனப் பெட்டி, சலவை இயந்திரம் ஆகியவற்றை இலவச மாக அளிக்க இருப்பதாக அக் கட்சியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட உள்ளது.
மேலும் 80 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தவும் திமுக திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பும் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் எனத் தெரிகிறது. இத்தகைய அறிவிப்பு கள் வழி வாக்காளர்களைக் கவர முடியும் எனத் திமுக தலைவர் கருணாநிதி கருதுவதாகவும் கூறப்படுகிறது. "திமுக தேர்தல் அறிக்கை நெற்றிப் பொட்டில் அடித்தது போல் அமையும்," என திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கூறி வருகிறார்.