அடுத்த தலைமுறையினர் நம்மைவிட சிறப்பாக இருப்பதை உறுதி செய்ய சிங்கப்பூரர்கள் தங்கள் அறிவாற்றலைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றுள்ளார் பிரதமர் அலுவக அமைச்சரும் மக்கள் கழகத்தின் துணைத் தலைவருமான திரு சான் சுன் சிங். சமூகத்தில் முதியோரும் ஒன்றிணைந்து பங்களிப்பது குறித்து மக்கள் கருத்துகளைக் கேட்டறிய நேற்று நடந்த கலந்துரையாடலில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் சான் கலந்துகொண்டார். மக்கள் கழகத்தின் எஸ்ஜி ஃபியூச்சர் ஈடுபாட்டுத் திட்டத்தின் ஓர் அங்கமாக நடத்தப்பட்ட இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் 80க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். கிட்டத்தட்ட 40 முதியோருடன், இளையர், பல்வேறு சமூக அமைப்பு உறுப்பினர்கள் கலந்து கொண்டு துடிப்புடன் மூப்படைவது, முதியோர் தொண்டூழியம், தலை முறைகளைக் கடந்த கற்றல் ஆகிய மூன்று பரந்த அம்சங்களில் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
தொழில்நுட்பத்தைப் பயன் படுத்துவது, சமூகத்தில் உள்ள மற்ற முதியோரை ஈடுபடுத்துவது, தலைமுறைகளைக் கடந்த கற்றலில் ஈடுபடுவது போன்ற பரிந்துரைகள் முன்வைக்கப் பட்டன. "தனிப்பட்டவர்களாக நாம் கற்றவற்றையும் அனுபவங்களையும் மற்றவருடன் பகிர்ந்துகொள்ளாமல் இருந்தால் நாம் 1965ஆம் ஆண்டிலேயே இருந்திருப்போம் என்றார் திரு சான். கலந்துரையாடலில் தாம் கேட்டவற்றை வைத்து இரண்டு முக்கிய அம்சங்களை அமைச்சர் முன்வைத்தார். ஒன்று, வாழ்நாள் கற்றலை முதியோர் அரவணைத்தல், மற்றொன்று தலைமுறைகளைக் கடந்த கற்றல், பகிர்வு சூழலை உருவாக்குதல். வாழ்நாள் கற்றல் என்று வரும்போது முதியோர் புதியன வற்றை மட்டும் கற்க விரும்புவதில்லை என்றும் தாங்கள் வாழ்நாள் முழுவதும் கற்க முடியும் என்பதில் முன் மாதிரியாகத் திகழ விரும்பு கிறார்கள் என்று கருத்து முன்வைக்கப்பட்டது.
முதியோர் தங்கள் ஸ்கில்ஸ் ஃபியூச்சர் உதவித் தொகையைப் பயன்படுத்தி பங்கேற்கக் கூடிய மேலும் அதிகமான பாடத் திட்டங்களை உருவாக்க மக்கள் கழகம் ஊழியரணி மேம்பாட்டு முகவையுடன் அணுக்கமாக செயல்படும் என்று அமைச்சர் சான் தெரிவித்தார்.
கலந்துரையாடலில் பங்கேற்பாளர்களின் கருத்துகளை நேரடியாகக் கேட்டறிந்தார் அமைச்சர் சான் சுன் சிங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்