மிர்பூர்: டி20 போட்டிகளில் தொடர்ந்து ஆறு ஆட்டங்களாக வெல்ல முடியாத அணியாகத் திகழ்ந்துவரும் இந்திய கிரிக் கெட் அணி, இன்று ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் பங்ளாதேஷை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி ஆறாவது முறையாகக் கிண்ணம் உயர்த்தும் நம்பிக்கையுடன் இருக்கிறது. ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணியில் ஹர்பஜன் சிங், புவனேஸ்வர் குமார், பவன் நேகி ஆகியோருக்கு வாய்ப்பு தரப்பட்டது. அவர்களின் செயல்பாடு சிறப்பாக இருந்த போதும் இன்றைய ஆட்டத்தில் அவர்கள் இடம்பெற வாய்ப்பில்லை.
ஆஷிஷ் நெஹ்ரா, அஸ்வின், ஜடேஜா ஆகியோர் மீண்டும் களமிறங்கக் காத்திருக்கின்றனர். அனைத்து துறைகளிலும் இந்தியா சிறப்பான அணியாக இருந்து வந்தாலும் முதல் ஆட்டத் தைப் போல இன்றும் பங்ளாதேஷை வீழ்த்திவிடலாம் என்று இந்திய வீரர்கள் மெத்தனமாக இருந்து விடக்கூடாது என்று எச்சரித்து உள்ளார் அணித்தலைவர் டோனி. "இந்திய அணி இன்னுமோர் ஆட்டத்தில் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்த வேண்டியுள்ளது. பங்ளாதேஷ் அணி தன்னை மெரு கேற்றிக்கொண்டு நல்ல அணி யாக உருவெடுத்துள்ளது. ஆகையால் இன்று போட்டி கடுமையாக வும் விறுவிறுப்பாகவும் இருக்கும்," என்றார் டோனி.