இன்றைய சிவப்புப் புள்ளி எதிர்கால பச்சைப் புள்ளி


உலகை அச்சுறுத்தி வரும் மாபெரும் பிரச்சினைகள் என்று பட்டியலிட்டால் தீவிரமடைந்து வரும் பயங்கரவாதமும் மோசமடைந்து வரும் சுற்றுச் சூழல் பாதிப்பும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும்.
பயங்கரவாதம் என்பது மனிதன், மனிதன் மீது தொடுக்கும் போர்; சுற்றுச்சூழல் பாதிப்பு என்பது மனிதன் இயற்கை மீது தொடுக்கும் போர். மனிதன் தொடுக்கும் இந்த இரண்டு போர்களிலுமே தோற்கப்போவது அதே மனிதன்தான்.
பயங்கரவாதத்துக்கு எதிராகப் படை திரட்டி அணிவகுத்து நிற்கும் உலக நாடுகள், சுற்றுச் சூழல் சீர்கேட்டுக்கு எதிராகவும் அணிவகுத்து நின்றன கடந்த மாதம். சுற்றுச்சூழல் பாதிப்பின் அனைத்து அம்சங்களும் இரண்டு வாரங்களுக்கு விவாதிக்கப்பட்டு, உலக வெப்பமயமாதலைத் தடுக்கும் நடவடிக்கைகளுக்கான இணக்கம் காணப்பட்டது பாரிசில்.
வரும் ஆண்டுகளில் உலகின் வெப்பநிலை உயர்வு 2 டிகிரி செல்சியசுக்கும் குறைவாக இருப்பதை உறுதி செய்வதற்கு சிங்கப்பூர் உட்பட அனைத்து நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.
சுற்றுச்சூழல் பாதுகாப்பைப் பொறுத்தவரை, சிறிய நாடாக இருந்தாலும் தனது பங்குக்கு மேலாகவே ஆவன செய்து வந்துள்ளது சிங்கப்பூர். அதன் 50 ஆண்டு சாதனைகளில் இந்தத் தீவை 'தோட்டத்தில் ஒரு நகரமாக' உருமாற்றியதும் அடங்கும்.
ஆனால், செய்தது போதும் என்று நிறுத்திக்கொள்வது சிங்கப்பூரின் பாணி அல்ல. சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு இன்னும் என்னவெல்லாம் செய்யலாம் என்று அது தொடர்ந்து யோசித்து வருகிறது.
அதனால்தான் தூய்மையான, பசுமையான, விவேகமான இல்லமாக சிங்கப்பூரை உருவாக்குவதில் பங்காற்ற வரும்படி சிங்கப்பூரர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங். இம்மாதமும் அடுத்த மாதமும் சுற்றுச்சூழல் குறித்து மொத்தம் 18 கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளன.
'தோட்டத்தில் நகரம்', 'துடிப்புமிக்க சமூக வெளிகள்', 'பசுமையான, விவேகமான நகரங்களும் கனிவுமிக்க வாழ்வும்', 'பசுமையான, பாதுகாக்கப்படும் கலாசாரம்' ஆகிய நான்கு அம்சங்களில் சிங்கப்பூரர்கள் தங்கள் யோசனைகளை முன்வைக்கலாம்.
நல்ல யோசனைகளை வழங்கியவர்களுடனேயே கூட்டு சேர்ந்து அவற்றை அரசாங்கம் நிறைவேற்றும் என்ற உறுதி மொழியையும் அமைச்சர் வோங் வழங்கியிருக்கிறார்.
உதாரணத்திற்கு, திரு டான் கென் ஜின் என்ற தனிமனிதர் சிங்கப்பூர் கையுறைத் திட்டத்தைத் (Singapore Glove Project) தொடங்கினார். மெதுவோட்டம், நீண்ட ஓட்டம் போன்றவற்றில் ஈடுபடுபவர்கள் தாங்கள் கூடும் அல்லது ஓடி முடிக்கும் இடங்களில் குப்பைகளைப் பொறுக்கும் எளிய திட்டம்
தான் அது.
தனிமனிதனாகத் தொடங்கப்பட்ட அந்தத் திட்டத்தில் இப்போது சுமார் 500 உறுப்பினர்கள் உள்ளனர் என்று சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி கடந்த வியாழக்கிழமை கரையோரப் பூந்தோட்டங்களில் நடைபெற்ற கருத்தரங்கில் தெரிவித்தார்.
திரு டானின் எளிய ஆலோசனை சிங்கப்பூரை இன்னும் தூய்மையாகவும் பசுமையாகவும் வைத்திருக்க உதவும் என்பதில் ஐயமில்லை. இதுபோன்ற ஆலோசனை களைத்தான் பொதுமக்களிடமிருந்து எதிர்பார்க்கின்றன தேசிய வளர்ச்சி அமைச்சும், சுற்றுப்புற, நீர்வள அமைச்சும்.
முடிவுகள் எடுக்கும் முன்னர் பொதுமக்களைக் கலந்தாலோசிக்கும் இந்தப் பாணி பிரதமர் லீ சியன் லூங் அரசாங்கத்தின் அடையாளமாகவே மாறி வருகிறது. அந்தப் பாணி அடுத்த 50 ஆண்டுகளுக்கு சிங்கப்பூரர்களைத் தயார்படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கும் என்று துணிந்து சொல்லலாம்.
மக்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கும் அரசாங்கத்தின் அழைப்பை ஏற்றுக்கொண்டு, கலந்துரையாடல்களில் பங்குபெற்று நல்ல யோசனைகளை முன்வைக்க சிங்கப்பூரர்கள் முன்வரவேண்டும்.
அமைச்சர் லாரன்ஸ் கூறியதுபோல, "சுற்றுப்புறத்தை நமது இல்லமாகவும் ச-மூகத்தை நமது குடும்பமாகவும் எண்ணிப் பராமரிக்க வேண்டும்".
அவ்வாறு செய்தால், இப்போது 'சிவப்புப் புள்ளி' என்று அழைக்கப்படும் சிங்கப்பூர், வருங்காலத்தில் 'பச்சைப் புள்ளி' என்ற பொருத்தமான புனைப்பெயரைப் பெறக்கூடும்!

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!