சுதாஸகி ராமன்
காலையில் யீஷுன் தொடக்கப்பள்ளிக்குச் செல்லும் ஒவ்வொருவருக்கும் அன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். பள்ளி வாசலில் நின்று அன் போடு கையசைத்து, நலம் விசாரித்து, புன்னகை பூக்க மாணவர் களையும் பெற்றோரையும் வரவேற்கிறார் ஆசிரியர் திரு வாசு தேவன் பிள்ளை. அவர் வழங்கும் வரவேற்பு, பள்ளிக்குள் செல்லும் அனைவரையும் தொற்றிக்கொள்கிறது. பள்ளிக்குள் நுழைவோர் எல்லாரும் இறுக்கம் தளர்ந்து சிரித்த முகத்துடன் கையசைத்தவாறே பள்ளிக்குள் நுழைகின்றனர். கொளுத்தும் வெய்யில் என்றாலும் கொட்டும் மழை என்றாலும் காலை 7 மணிக்குப் பள்ளிக்கூடத்தின் வாசலில் ஆசிரியர் திரு வாசுதேவன் பிள்ளையைக் காணலாம். அதேபோல் பள்ளி முடியும் நேரத்திலும் அவர் பள்ளி வாசலுக்கு வெளியே நின்று மாணவர்களையும் பெற்றோரையும் வழி அனுப்புவார்.
தமிழ் ஆசிரியரான திரு வாசுதேவன், பள்ளியின் மற்ற மாணவர் களுடனும் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் ஒருநாள் காலையில் பள்ளிக்கூட வாசலில் நின்று மாணவர்களை வரவேற்றார். அந்த நாள் அவருக்கு மிகுந்த மனமகிழ்ச்சியை அளித்தது. அவரது மகிழ்ச்சி மற்றவர்களையும் தொற்றியது. தொடர்ந்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் அடிக்கடி வரவேற்பு அளிக்கத் தொடங்கினார். இப்போது அது அவர் அன்றாட வழமைகளில் ஒன்றாகிவிட்டது. நல்ல பண்புகளையும் ஆக்ககரமான மனப்போக்கையும் தமது செயலால் மாணவர்களுக்குச் சொல்லித் தருகிறார் இந்தத் தமிழாசிரியர்.
"மாணவர்களுடன் உரையாடும் போது அவர்களுடன் பரஸ்பர புரிந்துணர்வு ஏற்படுகிறது. எங் களுக்கு இடையே பிணைப்பும் வலுவாகிறது. அதனால் அவர்களை எளிதாக ஊக்கப்படுத்த முடிகிறது. ஏதாவது பிரச்சினைகள் ஏற்படும்போது அதை எளிதாகத் தீர்க்க முடிகிறது," என்றார் திரு வாசுதேவன். மாணவர்களின் பலம், பல வீனங்களைப் பெற்றோர்களுடன் பகிர்ந்துகொள்ளும் அவர், மாணவர்களின் குடும்பப் பின்னணியை அறிந்து, அதற்கு ஏற்றார்போல் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறார்.