சாங்கி பொது மருத்துவமனையில் நேற்று பிற்பகல் 68 வயது நபர் மீது மனைவியைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. கோங் பெங் யீ என்ற அந்த நபரிடமிருந்து இதுவரை ஒப்புதல் வாக்குமூலம் பெறப்படவில்லை என்று நம்பப்படுகிறது. சம்பவத்தில் காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சென்ற ஞாயிற்றுக் கிழமை காலை 11.00 மணிக்கும் மாலை 4.35 மணிக்கும் இடையே காம்பஸ்வேல் கிரசெண்டில் உள்ள வீட்டில் மனைவி திருமதி வோங் சிக் இயோக்கை, 63, அவர் கொன்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
ஐந்தறை வீட்டின் வரவேற்பறையில் குடும்ப மாது அசைவற்றுக் கிடந்தார். அங்கு வந்த மருத்துவ உதவியாளர்கள் மாலை 5.00 மணி அளவில் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர். கோங்குக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஏப்ரல் 5ஆம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் வரையில் மனநிலையை மதிப்பிடுவதற்காக அவரைக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.