சிட்னி: மலேசியாவில் கைது செய்யப்பட்ட ஆஸ்திரேலிய செய்தியாளர்கள் மீது குற்றம் சாட்டப் படாமல் அவர்கள் நேற்று ஆஸ்திரேலியாவுக்குத் திருப்பி அனுப்பப் பட்டனர். அவர்கள் கூச்சிங்கிலிருந்து சிங்கப்பூர் வழியாக ஆஸ்திரேலியா திரும்பினர் என்று கூறப்பட்டது அவ்விரு ஆஸ்திரேலிய செய்தியாளர்களும் கைதானது குறித்து கவலை கொள்வதாகவும் மலேசிய அதிகாரிகளுடன் பேச்சு நடத்த இருப்பதாக ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் ஜூலி பிஷப் கூறியிருந்தார்.
ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கழகத்தின் (ஏபிசி) செய்தியாளர்களான லிண்டன் பெசர், லூய் எரோக்லு ஆகிய இருவரும் கூச்சிங்கில் சனிக்கிழமை மலேசியப் போலிசாரால் கைது செய்யப் பட்டனர். மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக், ஒரு பள்ளிவாசலுக்கு வந்திருந்த போது அவர் மீது கூறப்படும் புகார்கள் குறித்த விசாரணை பற்றி அவ்விரு ஆஸ்திரேலியர் களும் கேள்வி கேட்பதற்காக பிரதமரை நெருங்கியபோது அவ்விருவரும் கைது செய்யப்பட்டனர். போலிசாரின் உத்தரவை அவ்விருவரும் பின்பற்றத் தவறிய தால் அவர்கள் கைது செய்யப் பட்டதாக மலேசிய போலிசார் கூறினர்.
சரவாக், கூச்சிங் அனைத்துலக விமான நிலையத்தில் ஆஸ்திரேலிய தொலைக்காட்சி நிறுவனத்தின் புகைப்படக் கலைஞர் லுயி எரோக்லு (வலது), செய்தியாளர் லிண்டன் பெஸ்ஸர். படம்: ஈபிஏ