வேலூர்: தேர்தல் கூட்டணி தொடர்பாக பாஜகவிடம் முடிவு எதையும் தெரிவிக்கவில்லை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சியாளர்களை யாராலும் பார்க்க முடியவில்லை என்றார். "பாமகவுடன் கூட்டணி குறித்து பாஜக பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் கூட்டணி குறித்த எந்தவித பதிலையும் நாங்கள் இதுவரை அவர்களிடம் தெரிவிக்கவில்லை. பேச்சு வார்த்தை நிலுவையில் உள்ளது. கூட்டணி உள்ளதா, இல்லையா எனத் தற்போது வெளிப்படையாகத் தெரிவிக்க முடியாத சூழ்நிலை இருக்கிறது," என்றார் ராமதாஸ்.
தமிழகத்தில் பத்திரிகையாளர்களால் கூட ஆட்சியாளர்களைச் சந்திக்க முடியவில்லை என்று குறிப்பிட்ட அவர், சுதந்திரமான பன்முக ஊடகங்களும் வெளிப் படையான ஆட்சியுமே தமிழகத் துக்குத் தேவை என்றார். கடந்த மூன்று ஆண்டுகளாக 1 மெகாவாட் மின்சாரம் கூட தமிழகத்தில் உற்பத்தி செய்யப் படவில்லை என்று சுட்டிக்காட்டிய அவர், நாட்டில் நீதிமன்றங்கள் மீதான நம்பிக்கை குறைந்துள்ளது என்ற தலைமை நீதிபதியின் கருத்தை முழுமையாக ஆதரிப்ப தாகத் தெரிவித்தார். "தமிழகத்தில் ஜனநாயகம் ஐநூறு, ஆயிரம் ரூபாய்க்கு விற் பனை செய்யப்படுகிறது. இதற்கு ஆர்கே.நகர், திருவரங்கம் இடைத் தேர்தல்கள் நல்ல உதாரணம். "தாராளவாதம், பழமைவாதம், பொதுவுடைமை, சமூக ஜனநாயகம் என நான்கு விதமான அரசியல் சித் தாந்தங்கள் உள்ளன. இதில் பாமக சமூக ஜனநாயகத்தை கொள்கையாகக் கொண்டுள்ளது. மிக விரைவில் தேர்தல் அறிக் கையை வெளியிடுவோம்," என்றார் ராமதாஸ்.