மதுரை: அதிமுக தலைமையிடம் மன்னிப்புக் கடிதம் கொடுக்காமல், பதவி விலகும் கடிதத்தைக் கொடுத்த ஒரே நபர் தாம் மட்டுமே என்று பழ.கருப்பையா தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் களத்தில் இம்முறை திமுக, காங்கிரஸ் கூட்டணிதான் வலுவானதாக உள்ளது என்றார். "ஆளும் கட்சியினர் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க காவல்துறை வாகனங்களைப் பயன்படுத்தினால் தேர்தல் ஆணையம் உன்னிப்பாகக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
"தேமுதிக உள்பட சில கட்சிகள், அதிமுக, திமுக ஆகிய கட்சிகளை ஆட்சிக்கு வரவிடாமல் ஒழிக்கப்போவதாகச் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் நீங்கள் ஒருவரைத்தான் ஒழிப்பீர்கள். இன்னொருவரை ஒழிக்கமாட்டீர்கள். மாறாக வளர்ப்பீர்கள். கருணாநிதியைத் தோற்கடித்து ஜெயலலிதாவை வெற்றி பெறச் செய்வதால் இவர்களுக்கு என்ன பயன் இருக்கிறது? "அதிரடி நடவடிக்கையாக பல அமைச்சர்கள் நீக்கப்படுவதும் சேர்க்கப்படுவதும் அதிமுகவில் வாடிக்கை. மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தால் சேர்த்துக் கொள்வார்கள். நான் ஒருவன் தான் பதவி விலகும் கடிதம் கொடுத்தவன்," என்றார் பழ.கருப்பையா.
கட்சியில் இருந்து ஒருவர் நீக்கப்பட்டதற்கும் சேர்க்கப்பட்டதற்கும் என்ன காரணம் என்று அதிமுக தலைமை எப்போதுமே தெரிவிக்காது என்று குறிப்பிட்ட அவர், சென்னையில் வந்த வெள்ளத்திற்கு மழை மட்டுமே காரணமல்ல என்றும் நிர்வாக திறமையின்மைதான் காரணம் என்றும் சாடினார். தற்போது தேர்தல் ஆணையத் தின் நடவடிக்கை என்பது போகிற, வருகிறவர்களின் கால் சட்டைப் பையில் பணம் இருந்தால் எடுத்துக்கொள்வது போல் உள் ளது என்று பழ.கருப்பையா மேலும் கூறினார்.