மான்செஸ்டர்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்து தொடரில் டைனமோ கியவ்=மான்செஸ்டர் சிட்டி குழுக்கள் மோதிய இரண்டாவது சுற்று ஆட்டத்தில் இரு அணிகளுமே கோல் எதுவும் அடிக்காததால் ஆட்டம் சமநிலையில் முடிந்தது. ஆட்டம் தொடங்கிய ஐந்து நிமிடத்திலேயே சிட்டி குழு தலைவர் வின்சென்ட் கொம்பனி தசை பிரச்சினை காரணமாக வெளியேற, அவருக்கு பதில் களமிறங்கினார் நிகோலஸ் ஒட்டமென்டி. முதல் சுற்று ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் சிட்டி குழு வெற்றி பெற்றது. எனவே, மொத்த கோல் எண்ணிக்கை அடிப்படையில் மான்செஸ்டர் சிட்டி குழு முதன்முறையாக காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. சிட்டி குழுவில் இருந்து வெளியேறுவதற்கு முன் சாம்பின்ஸ் லீக் கிண்ணத்தை வெல்ல வேண்டும் என அக்குழு நிர்வாகி பெலகிரினி எண்ணம் கொண்டுள்ளார்.
அடுத்த பருவத்தில் பெப் கார்டியோலா சிட்டி குழுவின் நிர்வாகியாக பொறுப்பேற்கிறார். கடந்த மாதம் லீக் கிண்ணத்தை வென்ற சிட்டி குழு, பிரிமியர் லீக் பட்டியலில் 12 புள்ளிகள் பின் தங்கியுள்ளது. எனவே, சாம்பியன்ஸ் லீக் தொடரைக் கைப்பற்றி இந்த பருவத்தில் இரண்டாவது கிண்ணத்தை வெல்லும் நம்பிக்கை யுடன் உள்ளது சிட்டி குழு.